ராமாயண சபரியும், கிருஷ்ணரின் சபரியும்!


ராம் சபரி

’சபரி மோட்சம்’ என்ற தலைப்பில் பல பிரவசனங்களைக் கேட்டிருப்போம். கிருஷ்ணர் சரித்திரத்திலும் ஒரு சபரி உண்டு.

பொதுவாக எல்லோருக்கும் ராமரும் கிருஷ்ணரும் ரோல் மாடலாக இருப்பார்கள். இது hero worship எனப்படும். மாபெரும் இதிகாசத்தில் பாட்டுடைத் தலைவர்கள்.

நிறைய துணை நிலை மாந்தர்கள் உண்டு. இந்த இரண்டு சபரியும் அப்படித்தான்.

ராமாயண சபரி – காத்திருத்தல்

சில இல்லங்களில் குழந்தைகள் தானாக வளருவார்கள். சகோதரர்கள் ஒன்றாக இருந்தால் அவர்களது குழந்தைகள் மீது அவர்கள் அக்கறை ஏதும் காட்ட வேண்டாம். குழந்தைகள் ஒன்றாக வளர்வார்கள். விளையாடுவார்கள். பள்ளிக்குச் செல்வார்கள். தக்க பருவம் வந்ததும் வேலை, திருமணம் என்று ஒவ்வொன்றாக அப்படியே நடக்கும்.

வனம், தோட்டங்களில் செடி கொடிகள் தானாகவே வளரும். அதுபோல வேடுவ குலத்தில் பிறந்த சபரியும் தானாகவே வளர்ந்தாள். மற்ற குழந்தைகளுடன் விளையாடாமல், பெற்றோரைப் போல் வேட்டையாடுவதில் பொழுதைக் கழிக்காமல், சுள்ளி பொறுக்காமல் இருந்து வந்தாள்.

ஒருநாள் காட்டில் நெடுந்தூரம் வந்துவிட்டாள். அங்கு ஓர் ஆசிரமம் தென்பட்டது. அங்கு மதங்க முனிவர் தன் சீடர்களுக்கு உபதேசங்களை வழங்கிக் கொண்டிருந்தார். அவளுக்கு இது வித்தியாசமாக இருந்தது. அவர்கள் நீராடச் செல்வதைப் பார்க்கிறாள். ஆனால், பாதை கரடு முரடாக இருந்தது. மறுநாளில் இருந்து அவர்கள் செல்லும் பாதையை தூய்மைப்படுத்துகிறாள். தண்ணீர் தெளித்து கோலமிடுகிறாள். இதை கவனித்து வந்தார் மதங்க முனிவர். அவளை அங்கேயே தங்கச் சொல்கிறார். கருமையாக இருந்த பம்பை நதி அவள் நீராடியதும் தெளிந்தது. மதங்க முனிவர் அதையும் கவனித்தார்.

அவளை அழைத்து, “இங்கு ராம லட்சுமணர் என்று இருவர் வருவார்கள். அவர்கள் உனக்கு நற்கதி அளிப்பார்கள்” என்கிறார். அவர் கூறிய தினத்தில் இருந்து ராம நாமத்தை ஜபித்து வந்தாள். வருடங்கள் ஓடின. பழம், மலர்களை வைத்து காத்திருந்ததுதான் மிச்சம். காத்திருந்தாள்.. காத்திருந்தாள்.. காத்திருந்தாள்..

ஒருநாள் இருவர் வந்து, மதங்க முனிவர் ஆசிரமம் எங்கு உள்ளது என்று இவளை விசாரித்தனர். இவளுக்கு புரிந்துவிட்டது. வைத்திருந்த பழங்களை அவர்களுக்கு கொடுத்தாள். மதங்க முனிவர் ஆசிரமத்துக்கு வழி சொல்கிறாள். ராம லட்சுமணர் அவளுக்கு வேண்டியதை அளிக்கிறார்கள். இப்பிறவி போதும் என்றவளுக்கு மோட்சம் கிட்டியது.

கிருஷ்ண சபரி

கிருஷ்ணரின் சபரி

ஒரு ஊரில் கிருஷ்ணர் கோயிலில் பட்டர் அன்றைய பூஜை முடிந்ததும் கோயிலை பூட்டிவிட்டு இல்லம் திரும்பினார். மறுநாள் காலை சென்று பார்த்தால் கிருஷ்ணரில் காதில் சாணி அப்பியிருந்தது. பட்டர் திடுக்கிட்டார். தன் பக்தியில் ஏதோ குறையோ என்று நினைத்தார். அன்று இரவு பட்டர் கனவில் கிருஷ்ணர் தோன்றினார்.

”தினமும் கோயில் பூட்டும் சமயத்தில் ஒரு மூதாட்டி வந்துவந்து என்னை தரிசனம் செய்வாள். நீ கவனித்திருக்கிறாயா…?” என்று கேட்டார்.

பட்டர் சூட்சும சரீரம் பெற்று கிருஷ்ணருடன் மூதாட்டி வீட்டுக்குச் செல்கின்றனர். அந்த மூதாட்டி ‘சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்’ என்று சொல்லிக் கொண்டு தன் வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள். அடுப்பை சாணியால் மொழுகி முடித்ததும், கையில் ஒட்டிக் கொண்டிருந்த சாணித் துகளை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்தாள். அது சரியாக பூட்டியிருந்த கோயிலின் உள்ளே இருந்த கிருஷ்ணரின் காதில் போய் ஒட்டிக் கொண்டது.

தன் வீட்டு கிருஷ்ணர் பொம்மைக்கு தலையணை வைத்தாள். உறங்கச் செய்தாள். கிருஷ்ணருக்கு குளிரும் என்று போர்வை, கம்பளி போர்த்தினாள்.. காலை எழுந்ததும் கிருஷ்ணருக்கு குளிக்க வெந்நீர் போட்டாள். சர்வம் க்ருஷ்ணார்ப்பணம் என்று வாசல் தெளித்து கோலம் போட்டாள்.

பட்டரும் கிருஷ்ணரும் கோயில் திரும்பினர். கிருஷ்ணர் விக்கிரகத்தின் காதில் சாணித் துகள். அதை பட்டரை பிரசாதமாக எடுத்துக் கொள்ளச் சொல்கிறார் கிருஷ்ணர். பட்டரும் அவ்வாறே செய்தார்.

அன்று கோயில் பூட்டும் சமயம். அந்த மூதாட்டி வரவில்லை. என்னவென்று விசாரித்தால், மூதாட்டியின் வாழ்க்கைப் பயணம் நிறைவு பெற்றது.

கிருஷ்ணரை தினமும் அவள் சீராட்டி பாலூட்டி உறங்க வைப்பதால் அவள் கிருஷ்ணரின் தாய் ஆகிறாள். அவளது ஆன்மாவை இரு குண்டலங்களாக்கி தன் காதுகளில் அணிந்து கொண்டார் கிருஷ்ணர். மறுநாள் காலை கோயிலைத் திறந்ததும், கிருஷ்ணரின் காதுகளில் இரு குண்டலங்களைக் கண்டார் பட்டர்.

ராம க்ருஷ்ண ஹரி.

x