இதிகாசப் புராண கதாபாத்திரங்கள் மூலம் நாம் அறிவது என்ன?


ராமர்

என் நண்பர் ஒருவர் சொல்லுவார், “நான் இதிகாச புராணம் தொடர்பான டிவி தொடர்கள், மேடை நாடகங்களைப் பார்ப்பதில்லை” என்று. ஏனென்றால், அதில் அந்த கதாபாத்திரங்களாக நடிக்கும் நடிகர்களே, ராமராகவும் கிருஷ்ணராகவும்,அம்மனாகவும், சிவபெருமானாகவும் காட்சி அளிப்பார்கள். அதனால் ராமபிரானை நினைத்துக் கொண்டால், இந்த நடிகர்களின் முகம்தான் முதலில் நினைவுக்கு வரும் என்பார்.

பலருக்கு அருண்கோயில் தான் ராமர் என்றதும், தீபிகா தான் சீதாதேவி என்றதும், என்டிஆர், நிதிஷ் பரத்வாஜ் தான் கிருஷ்ண பரமாத்மா என்றதும், சிவாஜி கணேசன் தான் கர்ணன் என்றதும் நினைவு வரும்.

நாம் யாரும் கடவுளையோ, இந்த அவதாரங்களையோ நேரே பார்த்ததில்லை. ஓவியங்கள், நாடகம், தொடர்களில் வரும் கதாபாத்திரங்கள் மூலமே அறிகிறோம்.

சிறுவயதில் பாடபுத்தகங்களில் வரும் ஓவியங்கள், புகைப்படங்கள் மூலமே நாம் இவர்களை அறிகிறோம். அனைவரும் விரும்பும் கதாநாயகர்கள், ராமரும் கிருஷ்ணரும்தான்.

வால்மீகி ராமாயணமும் கம்ப ராமாயணமும் படித்தபோது அவர்கள் ஒவ்வொரு கதாபாத்திரத்தை வர்ணிக்கும் விதத்தை வைத்து நாம் ராமபிரான் போன்ற அவதாரங்களுக்கு உருவம் கொடுக்கிறோம்.

பால பருவத்தில் கலைகள் கற்பது, அரச வாழ்க்கை, வில்லேந்திய ராமர், கானகம் செல்லுதல், இலங்கேஸ்வரன் வதம், அயோத்தி திரும்புதல், ராமர் பட்டாபிஷேகம், லவ குசர்களின் வாழ்க்கை – இப்படியே நாம் படிக்கப் படிக்க நம் மனதில் ஒரு நெடுந்தொடர் ஓடும். (வல்வில் ராமர், கோதண்ட ராமர், பட்டாபிராமர், சுந்தரராமர் என்று ராமபிரான் பலவிதங்களாக நம் முன் தோன்றுவார்)

சிறையில் பிறப்பு, பிருந்தாவன வாழ்க்கை, கோபியருடன் விளையாட்டு, வெண்ணெய் உண்பது, சுதாமா போன்ற நண்பர்களுடன் விளையாட்டு, பஞ்ச பாண்டவர்களின் தோழன், பார்த்தனுக்கு சாரதி, பகவத் கீதை உரைப்பது – இப்படியே நாம் படிக்கப் படிக்க நம் மனதில் இவற்றை காட்சிப் படுத்துகிறோம். (விளையாட்டுப் பையன் இப்படி பகவத் கீதை உரைப்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கும் – மனது பக்குவடைந்து, நமது அறிவு முதிர்ச்சி, அனுபவம் காரணமாக சாதாரண மனிதன் கடவுள் நிலையை அடையலாம் என்பது புலனாகிறது).

ராமாயண, மகாபாரத பிரவசனங்கள் மூலம், மனக்கண் கொண்டு காட்சிப்படுத்துதல் வலுவடைகிறது.

நாடகம், நெடுந்தொடர்களில் இந்த கதைகளைப் பார்ப்பதால், முன்னர் நாம் படித்து மனதில் காட்சிப்படுத்தியதை, அப்படியே நேரில் பார்க்கிறோம்.

இப்படி படித்தது, கேட்டது, பார்த்தது கொண்டு நாம் ஒரு கதா பாத்திரத்தை மனதில் கொள்கிறோம். அதையே நடிக்கும்போது, அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுகிறோம்..

இந்த கதாபாத்திரங்கள் சொல்லும் நன்மைகளை எடுத்துக் கொண்டு, செய்யும் தீமைகளை செய்யக் கூடாது என்று உறுதி கொண்டு, தினமும் ஏதாவது கற்றுக் கொண்டே இருப்போம்..

ராம க்ருஷ்ண ஹரி.

x