பகவன் நாமம் நமது துயரங்களைப் போக்க வல்லது என்பதை நாம் கேள்விப்பட்டுள்ளோம். நாமாக அவனது பெயரை / நாமத்தை உச்சரிப்பதில் அதிக பலன் கிட்டும்.
இருந்தாலும் அவன் நாமத்தைக் கூறாமல், அது வெறும் சப்தமாக இருந்தாலும், அதாவது அவன் பெயர் (நாமம்) இல்லாமல், ஒரு மனிதனின் பெயராக (சப்தம்) இருந்தாலும் பலன் கிட்டும் என்கிறார்கள்.
இறைவனின் பெயரை மனிதர்களுக்கு வைத்தால் அது சப்தமாகிறது.
பகவான் கிருஷ்ணனின் பெயரை ஒரு மனிதருக்கு வைத்தால் அது ஒருவருடைய பெயராக இருப்பதால் அது சப்தம் என்றே கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாகவே பலர் தங்கள் மகன் / மகளுக்கு இறைவனின் பெயரை வைப்பார்கள். அவர்களது இறுதி காலத்தில் மகன் / மகள் பெயரை அழைப்பதால், அது அவன் நாமத்தையே கூறுவதாகக் கொள்ளப்படும்.
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் “சங்கீர்த்ய நாராயணா சப்த மாத்ரம் விமுக்த துக்கா சுகினோ பவந்து” என்ற வரிகளைக் கேட்கும்போது, இதை அறிந்து கொள்ளலாம்.
நாராயணா என்ற நாமத்தை சொல்ல வேண்டும் என்று சொல்ல வேண்டாம். தெரியாமல் சொன்னாலே போதும் என்று பொருள்படுகிறது. அந்த சப்தமே பல துயரங்களைப் போக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கு உபன்யாசகர்கள் ஒரு விளக்கம் தருவார்கள், குழந்தை மழலைச் சொல்லால் ஏதேனும் கூறினால், எப்படி அதன் தாய் உணர்ந்து கொள்கிறாளோ, அதுபோல அவன் பெயரை தெரிந்து சொன்னாலும் தெரியாமல் சொன்னாலும் அதை அவன் சங்கீர்த்தனமாக ஏற்றுக் கொள்வான்.
அஜாமிளன் என்ற அந்தணர், தனது பத்தாவது குழந்தைக்கு நாராயணன் என்று பெயரை வைக்கிறார். தன்னையும் அறியாமல் பல முறை ‘நாராயணா’ என்று கூறுகிறார்.
அவருடைய கடைசி காலத்தில் யமதூதர்கள் அவரது உயிரைப் பறிக்க வரும்போது, தனது மகனை நினைத்து ‘நாராயணா’ என்று கூப்பிடுகிறார்.
‘நாராயணா’ என்ற குரல் கேட்டதும் விஷ்ணுவின் தூதர்கள் அங்கு வந்துவிடுகிறார்கள்.
யமதூதர்கள் அஜாமிளனின் பாவங்களைப் பட்டியலிட, விஷ்ணு தூதர்கள், ‘நாராயணா’ என்று அழைத்ததன் காரணமாக அவரது அனைத்து பாபங்களும் நீங்கி விட்டன என்கிறார்கள்.
நிறைவாக பகவன் நாமாவின் மகிமையை உணர்ந்து, ஹரித்வார் சென்று தனது இறுதி நாட்களைக் கழித்தார் அஜாமிளன். பின்னர் வைகுண்ட பதவி அடைந்தார்.
இப்போது நமக்கே புரிந்திருக்கும், குழந்தைகளுக்கு ஏன் இறைவனின் பெயர் வைக்கப்படுகிறது என்று…