சீர்காழி என்றாலே சட்டைநாதர் ஆலயமும், திருஞானசம்பந்தரும்தான் ஆன்மிக நண்பர்களுக்கு நினைவுக்கு வருவார்கள். ஆனால், அதே சீர்காழியில் வங்காளத்தைச் சேர்ந்தவர் கட்டிய அழகான முருகன் ஆலயம் ஒன்றும் இருப்பதை பலரும் அறியமாட்டார்கள்.
கதிர்காம சுவாமிகள் என்பவர் கட்டிய முருகன் ஆலயம்
சீர்காழி தென்பாதியில் கைவிளாஞ்சேரி பகுதியில் உள்ளது. இந்தக் கோயில் ‘கதிர்காம பாலதண்டாயுதபாணி ஆலயம்’ என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. சீர்காழி - மயிலாடுதுறை சாலையில் குருஞானசம்பந்தர் பள்ளிக்கு எதிர்புறம் சற்று உள்ளே தள்ளி கம்பீரமாக இருக்கிறது இந்தக் கோயில்.
யார் இந்த கதிர்காம சுவாமிகள்?
இவர் வங்காளம் பகுதியில் அவதரித்தவர். இவரது தந்தை நேபாள அரசில் மந்திரியாக இருந்தவர். செல்வச்செழிப்பில் வளர்ந்தாலும் அதில் நாட்டமில்லாத இவர் ஞானமார்க்கம் காண, தனது ஏழாவது வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறினார். மனம்போன போக்கில் பல இடங்களில் சுற்றித் திரிந்தார். தனது 12-ம் வயதில் ஞானானந்தகிரி சுவாமிகளைச் சந்தித்தார்.
இருவரும் இலங்கையில் உள்ள கதிர்காமம் முருகன் தலத்தில் தங்கி ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டனர். இவர்களின் கடுமையான தவத்தின் விளைவாக கதிர்காமம் முருகப்பெருமான் இருவருக்கும் தரிசனம் தந்ததாகவும் ஞானானந்த சுவாமிகளை ஞான மார்க்கத்திலும், கதிர்காம சுவாமிகளை பக்தி மார்க்கத்திலும் செல்லும்படி அனுக்கிரகம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து சுமார் 65 ஆண்டுகள் இலங்கையில் கழித்த கதிர்காம சுவாமிகள், 1902-ல் இந்தியா திரும்பினார். தமிழ்நாட்டில் வந்திறங்கியவர் ஒவ்வொரு ஊராகப் பயணப்பட்டார்.
சீர்காழிக்கு வந்தவருக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு உணர்வு உந்த, உப்பனாற்றங்கரையில் ஒரு சிறு கீத்துக் கொட்டகை அமைத்து தங்கலானார்.ஆரம்ப நாட்களில் காவடி எடுத்துக் கொண்டு தென்பாதி, சட்டநாதபுரம் சுற்றுவட்டாரத்தில் யாசகம் பெற்று உண்டார்.
தங்குதலுக்கும் உணவுக்கும் பிரச்சினையில்லை. ஆனால் கதிர்காமம் முருகப்பெருமான் அவருக்குள் இருந்துகொண்டே இருந்தார். முருகனுக்கு இங்கு ஒரு ஆலயம் கட்டவேண்டும் என்ற நினைவு தீவிரமானது. அதனையடுத்து ஆலயம் கட்டும் பணியைத் தொடங்கினார் கதிர்காம சுவாமிகள். யாசகம் பெற்றே ஆலயப் பணிகள் நடைபெற்றன. 1925-ல், சீர்காழியில் கதிர்காம தண்டாயுதபாணி ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. ஆலயத்தில் தன் காலத்திலும், தனக்கு பிறகான காலம் முழுவதிலும் பூஜை, வழிபாடுகள் நடத்த தேவையானவற்றையும் சுவாமிகளே தேடிவைத்தார்.
ஆலயம் கட்டியபிறகு அங்கிருந்தவாறே பக்தர்களுக்கு அருள்வாக்குச் சொன்னார். அவர் வாக்கு பலிதமானது. தங்கள் பிரச்சினைகளை தேடிவந்து சொல்லி தீர்வுகண்டு போனார்கள் மக்கள். கூடவே, பல அற்புதங்களையும் நிகழ்த்திய சுவாமிகள், 19.11.1962-ல் அமர்ந்த நிலையிலேயே சமாதி ஆனார். சுவாமிகள் இருந்த அறையில் சுவர் கடிகாரம் இரவு 12 மணிக்கு தானாகவே நின்று போயிருந்தது.
சுவாமிகள் சித்தியானவுடன், அவர் விருப்பப்படி உப்பானாற்றங்கரையின் வட பகுதியில் சுவாமிகள் அதிஷ்டானம் ஒன்று அமைக்கப்பட்டு இன்றளவும் தினசரி பூஜைகள் நடைபெற்று வருகிறது.
ஆலயச்சிறப்பு
சுமார் 95 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். அழகான வண்ண முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் மணிமண்டபமும், அதைத் தொடர்ந்து மகாமண்டபமும் உள்ளன. மகாமண்டபத்தின் நடுவே பிரார்த்தனை தீபம், பீடம் ஆகியவற்றுடன் சிந்தாமணி விநாயகரும் இருக்கிறார். அர்த்த மண்டபத்திலும் சிற்றம்பல விநாயகர், பேரம்பல விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அருள்பாலிக்கிறார்கள்.
அதனையடுத்துள்ளது சன்னதி. அங்கு மேற்கு நோக்கி கதிர்காம பாலதண்டாயுதபாணி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். முகத்தில் தெய்விகப் புன்னகை தவழ்கிறது. முருகனுக்குக் கீழிருக்கும் பீடத்தின் கீழ் நூதன முறையில் யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஜலயந்திரம் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பான அமைப்பு.
மகாமண்டபத்தில் சமயக்குரவர்கள் நால்வர், அருணகிரிநாதர், நடராஜர், சிவகாமி அம்மன், வேணு கோபாலன் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். முருகப்பெருமான் உற்சவ திருமேனியும் தனி சன்னிதியில் உள்ளது. கிழக்கில் விநாயகர் அருள்பாலிக்கிறார்.
உற்சவங்கள்
இங்கு கந்தசஷ்டி விழா 6 நாட்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முதல் 5 நாட்கள் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுடன் 6-ம் நாள் சத்ரு சம்ஹார அர்ச்சனை நடைபெறுகிறது. மாத சஷ்டிகளில் முருகனுக்கு அவல் பாயாசம் நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. மாதக் கிருத்திகை நாட்களில் இங்கு சபண ஹோமம் நடைபெறுகிறது.
பங்குனி உத்திரம் அன்று 108 பால்குட அபிஷேகம் மூலவருக்கு நடைபெறும். வைகாசி விசாகத்தன்று முருகனுக்கு மாம்பழ அர்ச்சனை நடைபெறும். அர்ச்சனை செய்யப்பட்ட பழங்களை பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருகின்றனர்.
கதிர்காம சுவாமிகளுக்கு, நாயன்மார்கள் மீது அதிக பக்தி உண்டு. எனவே நாயன்மார்களின் குரு நட்சத்திரங்களில் அவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்த ஏற்பாடு செய்தார். அது இன்றும் இந்த ஆலயத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.
கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருநாளின் போது, இலுப்பை எண்ணெயில் 1008 தீபமேற்றுவது இங்கு வழக்கமாக இருந்து வருகிறது.
தினசரி இரண்டு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயம், காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறந்திருக்கும்.
ஆன்மிக பயணமாக சீர்காழி வருகிறவர்கள் கதிர்காம பாலதண்டாயுதபாணி ஆலயத்தையும், உப்பனாற்றங்கரையில் உள்ள கதிர்காம சுவாமிகளின் அதிர்ஷ்டானத்தையும் தரிசித்துச் செல்லலாமே.