தமிழகத்தில் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படுவது போல, புதுச்சேரி கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை நடத்த வேண்டும் என்று அம்மாநில மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
திமுக அரசு பதவியேற்று 100 நாட்களில், தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதற்காக அர்ச்சகர்கள், ஒதுவார்கள் உட்பட பலரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். பல கோயில்களில் தமிழில் அர்ச்சனை தற்போது நடைபெற்று வருகின்றது.
இதைப்போல, புதுச்சேரி - காரைக்காலில் உள்ள திருக்கோயில்களிலும் தமிழ் மக்கள் தமிழிலேயே அர்ச்சனை செய்ய வேண்டுகோள் என்ற கோரிக்கையை தெய்வத் தமிழ்ப் பேரவை என்ற அமைப்பு முன்னெடுத்துள்ளது.
இதற்கான பிரச்சார இயக்கத்தை, அந்த அமைப்பு கடந்த 21-ம் தேதி மாலை புதுச்சேரியில் தொடங்கியது. காந்தி வீதியில் உள்ள அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில் முன்பாக தெய்வத் தமிழ்ப் பேரவை புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் விசயகணபதி தலைமையிலும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருணபாரதி ஒருங்கிணைப்பிலும் நடந்த நிகழ்வை, சிவனடியார் சிவசங்கரன் திருமுறைப் பதிகங்களைப் பாடி தொடங்கி வைத்தார்.
வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் தமிழ் ஒலிப்பதற்கு தொடர்ந்து செயலாற்றி வரும் சிவனடியார் இராசாராம், உலகத் தமிழ்க் கழகப் புதுச்சேரி தலைவர் கோ. தமிழுலகன், புதுச்சேரி தமிழ் எழுத்தாளர் கழகச் செயலர் புதுவைத் தமிழ்நெஞ்சன், தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலர் வேல்சாமி உள்ளிட்டோர் பரப்புரை இயக்கத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினர்
அங்கு தொடங்கிய வேண்டுகோள் பிரச்சாரம் காந்தி வீதி - காமாட்சி அம்மன் கோயில் வீதி, ஈசுவரன் கோயில் வீதி சந்திப்பு மற்றும் வேதபுரீஸ்வரர் திருக்கோயில், வரதராஜப் பெருமாள் திருக்கோயில் ஆகிய இடங்களுக்கும் தொடர்ந்தது. பக்தர்களிடமும், வணிகர்களிடமும் தமிழ் அர்ச்சனை வலியுறுத்தும் துண்டறிக்கைகள் வழங்கி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. பிறகு, வேதபுரீசுவரர் திருக்கோயிலுக்குச் சென்று தமிழில் அர்ச்சனை மேற்கொள்ளப்பட்டது.
இக்கோரிக்கை அரசால் செயல்படுத்தப்படும் வரை தொடர்ந்து புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் தமிழ் அர்ச்சனை கோரியும், தமிழில் பெயர் சூட்டக்கோரியும் தமிழ் மக்களிடையே துண்டறிக்கைகள் வழங்குதல் மற்றும் பிரச்சாரம் மேற்கொள்ளவும் இவ்வமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.