ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் நாளான (14/08/2021) இன்று சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவனுள் கலந்த தினமாகும். தேவாரம் பாடிய நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் சைவ சமய ஆச்சார்யாராகவும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் போற்றப்படுபவர். சைவ சமய திருமுறைகள் பன்னிரண்டில், 7 ஆம் திருமுறையை அருளிச் செய்தவர். பல அற்புதங்களை நிகழ்த்தியவர். அவர் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் இறைவன் திருவடியை அடைந்தார்.
அதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு மடங்கள் மற்றும் திருக்கோயில்களில் அவரது குருபூஜை நடைபெற்றது. அதுசமயம் அம்பிகையுடன் சிவபெருமான்,சைவ சமய ஆச்சாரியர்கள் நால்வர் (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசக சுவாமிகள்) திருவுருவப்படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த திருப்பாட்டு என்கிற தேவாரப் பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.