புனித அந்தோணியார் ஆலய திருவிழா: மேல்நாரியப்பனூர் சேலம் - சென்னை எழும்பூர் ரயில் 4 நாட்களுக்கு நின்று செல்லும்


பிரதிநிதித்துவப் படம்.

சேலம்: புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு சேலம் - சென்னை எழும்பூர் ரயில்கள் 4 நாட்களுக்கு மேல்நாரியப்பனூரில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம்-சென்னை எழும்பூர் விரைவு ரயிலானது, சேலம் மாவட்ட எல்லையை அடுத்துள்ள மேல்நாரியப்பனூரில் வரும் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 4 நாட்களுக்கு மட்டும் தினமும் ஒரு நிமிடம் நின்று செல்லும். யஷ்வந்த்பூர்- புதுச்சேரி, புதுச்சேரி- மங்களூரு ரயில்களும் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தின் எல்லையை அடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேல்நாரியப்பனூர் கிராமத்தில், பழமையான புனித அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்வர்.

இந்நிலையில், புனித அந்தோணியர் தேவாலயத்தின் ஆண்டு திருவிழாவையொட்டி, சேலம்- விருத்தாசலம் ரயில் பாதை வழியாக செல்லும் சில ரயில்கள், மேல்நாரியப்பனூரில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலத்தில் இருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்படும் சேலம்- சென்னை எழும்பூர் விரைவு ரயிலானது வரும் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை, மேல்நாரியப்பனூரில் இரவு 10.45 மணிக்கு வந்து, 10.46 மணி வரை (ஒரு நிமிடம் மட்டும்) நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், புதுச்சேரியில் மாலை 4.35 மணிக்குப் புறப்படும், புதுச்சேரி- மங்களூரு விரைவு ரயிலானது வரும் 13-ம் தேதியன்று, மேல்நாரியப்பனூரில் இரவு 7.49 மணிக்கு வந்து, 7.50 மணி வரை (ஒரு நிமிடம் மட்டும்) நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் யஷ்வந்த்பூரில் இரவு 8.45 மணிக்குப் புறப்படும் யஷ்வந்த்பூர்- புதுச்சேரி விரைவு ரயில், வரும் 16-ம் தேதியன்று, மேல்நாரியப்பனூரில் நள்ளிரவு 2.24 மணிக்கு வந்து, 2.25 மணி வரை (ஒரு நிமிடம் மட்டும்) நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


x