சென்னையில் முதல் முறையாக ஸ்ரீ பத்ராசல ராமர், 20 அடி உயர அனுமன் தரிசனம்


கோப்புப் படம்

சென்னை: சென்னையில் முதல் முறையாக ஸ்ரீ பத்ராசல ராமர் மற்றும் 20 அடி உயர அனுமன் தரிசனம் நடக்க இருக்கிறது.

பக்த பாரத சேவா அறக்கட்டளை சார்பில் சென்னையில் முதல் முறையாக ஸ்ரீ பத்ராசல ராமர் தரிசனம் நடைபெற உள்ளது. அதன்படி ஜூன் மாதம் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மூன்று நாட்கள் சென்னை தி.நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கல்யாண மண்டபத்தில் நடைபெறும் விழாவில் ஸ்ரீ பத்ராசல ராமர் மற்றும் 20 அடி உயர அனுமன் தரிசனம் தர உள்ளனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக 28-ம் தேதி மாலை 1,008 புடவைகளால் சீதாதேவிக்கு அர்ச்சனை செய்யப்பட உள்ளது. அர்ச்சனை முடிந்த பிறகு அந்த புடவைகள் பக்தர்களுக்கு வழங்கப்படும். அந்தவகையில் ஜூன் 28-ம் தேதி காலை 6 மணிக்கு சுப்ரபாதத்துடன் தொடங்கும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, ஸ்ரீ ராமப்ரபாவம் உபன்யாசம், புத்ரகாமேஷ்டி யாகம், 108 விளக்கு பூஜை, ஆரத்தி நடைபெற உள்ளது.

தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு பஜனை, சயன ஆரத்தியும் நடக்கிறது. 29-ம் தேதி காலை 10.30 மணிக்கு சீதா தேவிக்கு 1,008 புடவை அர்ச்சனையும், 3 மணிக்கு சீதா கல்யாணமும் நடக்கிறது.

அதனைத் தொடர்ந்து ராமர் விசேஷ ஆரத்தி, வில்லுப் பாட்டு, ராமர் கீர்தனம் நடைபெற உள்ளது. 30-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு ராமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. விழா நடைபெறும் 3 நாட்களும் ராமரின் மகிமை குறித்த சொற்பொழிவுகளும், கச்சேரியும் நடக்க இருக்கிறது. இவ்விழாவில் கட்டணம் ஏதுமின்று அனைவரும் கலந்து கொள்ளலாம்.