பழநி: உயர்நீதிமன்றக் கிளை உத்தரவை அடுத்து பழநி கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில் கடைகளை மறைத்து சுற்றுச் சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் கிரிவலம் வந்து மலைக்கோயிலில் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மொத்தம் 2.5 கி.மீ. தூரம் கிரிவலப் பாதை உள்ளது.
இந்நிலையில் வழக்கு ஒன்றில், ‘பக்தர்களுக்கு இடையூறாக கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கிரிவலப் பாதையை இனிமேல் வர்த்தக பயன்பாட்டுக்குப் பயன்படுத்த கூடாது. தனியார் வாகனங்கள் கிரிவலப் பாதையில் நுழைவதை தடுக்க வேண்டும்’ என உயர் நீதிமன்றக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.
இதையடுத்து, கிரிவலப் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மார்ச் 8-ம் தேதி முதல் கிரிவலப் பாதைகள் அடைக்கப்பட்டு தனியார் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. மேலும், கிரிவலப் பாதையில் வணிக நோக்கிலான கடைகள் ஏற்படாமல் தடுக்க தனியார் கடைகளுக்கு முன் தடுப்புகள் அமைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, தற்போது ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில் கிரிவலப் பாதையை சுற்றிலும் 6 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கிரிவலப் பாதையில் சொந்தமாக கடைகள் வைத்திருப்போருக்கு 2 முதல் 3 அடிக்கு பாதை விடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆக்கிரமிப்புகளைத் தடுக்க கடைகளை மறைத்து சுற்றுச்சுவர் அமைத்தால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே, சுற்றுச்சுவர் அமைக்கும் திட்டத்தை பழநி கோயில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை பரிசீலனை செய்ய வேண்டும் என்று பழநி கிரிவலப் பாதை வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.