காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தீர்த்தவாரி: நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து காலை மாலை வேளைகளில் பெருமாள் வீதியுலா வந்தார். முக்கிய நிகழ்வான கருட சேவை 22-ம் தேதிநடைபெற்றது. 26-ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.

விழாவின் 9-ம் நாளான நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியையொட்டி வரதராஜ பெருமாள், தேவி, பூதேவி சமேதராய் 100 கால் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

பின்னர் வரதராஜ பெருமாள் அனந்த சரஸ் குளத்துக்கு அழைத்து வரப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர்திருக்குளத்தில் தீர்த்தவாரி விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்களும் புனித நீராடினர். இவ்விழாவையொட்டி நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

x