பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்


பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழநி திருஆவினன்குடி கோயிலில் நேற்று நடைபெற்ற கொடியேற்றம். படம்: நா.தங்கரத்தினம்

பழநியில் பங்குனி உத்திரத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஏப்.10-ம் தேதியும், தேரோட்டம் ஏப்.11-ம் தேதியும் நடைபெறுகிறது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி திருஆவினன்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேவல், மயில், வேல் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. திருஆவினன்குடி, மலைக் கோயிலில் மூலவர், உற்சவர், விநாயகர், மயில், துவார பாலகர்களுக்கு காப்புகள் கட்டப்பட்டன.

தொடர்ந்து, மூலவர், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, வள்ளி - தெயவானை சமேத முத்துக்குமாரசுவாமி பட்டக்காரர் மடத்துக்கு எழுந்தருளினார்.

கொடியேற்ற நிகழ்ச்சியில், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தனசேகர், பாலசுப்பிரமணி, அன்னபூரணி, கண்காணிப்பாளர்கள் ராஜா, அழகர்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவிழாவின் 10 நாட்களும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.

ஆறாம் நாளான ஏப்.10-ம் தேதி மாலை 5.30 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், இரவு 8.30 மணிக்கு மேல் சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித்தேரோட்டமும் நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஏப்.11-ம் தேதி பங்குனி உத்திரத்தன்று, நண்பகல் 12 மணிக்கு தேரேற்றம், மாலை 4.30 மணிக்கு மேல் கிரிவலப்பாதையில் தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப்.14-ம் கொடியிறக்குதலுடன் விழா நிறைவடைகிறது. திருவிழாவின் முதல் நாளான நேற்று ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து தீர்த்தக்காவடியுடன் பழநி மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர்

x