அசத்தும் பெரம்பலூர் கொத்தவாசல் அரசுப் பள்ளி; ஒரே நாளில் 100 பேர் சேர்ந்தனர்: மாணவர் சேர்க்க போட்டா போட்டி!


பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கொத்தவாசலில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று ஒரே நாளில் நூறு மாணவர்களை சேர்ந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கொத்தவாசல் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆசிரியர்களின் முயற்சியால் 7 ஸ்மார்ட் வகுப்பறைகள், 65 கணிணிகளுடன் கணினி ஆய்வகம், கணித ஆய்வகம், அறிவியல் ஆய்வகம், ஹைடெக் ஆய்வகம், உணவு அருந்தும் கூடம், கலையரங்கம், மூலிகைத் தோட்டம், இயற்கை காய்கறித் தோட்டம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, சுகாதாரமான கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தனியார் பள்ளிகளில் இருப்பதைவிட பல்வேறு சிறப்பு வசதிகள் கொண்ட இப்பள்ளியில், மாணவர்களுக்கு அக்கறையுடன் கற்பிக்கும் ஆசிரியர்களும் இருப்பதால், இந்தப் பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க பெற்றோர் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இப்பள்ளியில் நேற்று 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெற்றோர், பள்ளி வளாகத்தில் தங்கள் குழந்தைகளை சேர்க்க ஆர்வத்துடன் குவிந்தனர். இதனால், நேற்று ஒரே நாளில் 100 பேர் சேர்ந்துள்ளனர். இன்னும் சில நாட்கள் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியது: இப்பள்ளியில் கடந்தாண்டு 117 மாணவர்கள் புதிதாக சேர்ந்தனர். நிகழாண்டு 200 மாணவர்கள் வரை சேர்க்க முடிவு செய்துள்ளோம். சேர்க்கைக்காக வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் நிகழாண்டு 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் தலா ஒரு வகுப்பை கூடுதலாக ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுகிறது. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் என்றனர்.

x