கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏழாவது படை வீடாக கருதப்படும் இக்கோயிலில் கடந்த 30-ம் தேதி கும்பாபிஷேக நிகழ்வுகள் தொடங்கின. கோயில் மண்டபத்தில் 73 குண்டங்கள் அமைக்கப்பட்டு ஹோமங்கள் நடைபெற்றன. நேற்று அதிகாலை 6-ம் கால வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. யாக வேள்வியில் கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு மருதாசல மூர்த்தி விமானம், ஆதி மூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் முன்னிலையில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என முழக்கமிட்டனர். விழாவில், அறங்காவலர் குழுத் தலைவர் ஜெயக்குமார் மற்றும் அறங்காவலர்கள், கோயில் துணை ஆணையர் செந்தில்குமார் பங்கேற்றனர்.
தொடர்ந்து, ஆதிமூலவர், விநாயகர், மருதாசலமூர்த்தி, பட்டீசுவரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜப் பெருமாள், சண்டிகேஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர் முருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து பேரொளி வழிபாடு நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை மகா அபிஷேகம், வள்ளி, தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம், திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோயில் வளாகம் மற்றும் அடிவாரப் பகுதிகளில் 10 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள சந்நிதிகளின் மண்டபங்கள் மீது 750 பேரும், பிற இடங்களில் 1,500 பேரும் கும்பாபிஷேகத்தை நேரில் காண அனுமதிக்கப்பட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் சிறப்பு மினி பேருந்துகள் மூலமும், படிக்கட்டுகள் வழியாக நடந்து வந்தும் பக்தர்கள் மலையில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மாநகர காவல் ஆணையர் ஏ.சரவண சுந்தர் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்