மலச்சிக்கல் வர காரணம் என்ன? தவிர்ப்பது எப்படி? - அலர்ட் குறிப்புகள்!


மலச்சிக்கல் என்றால் என்ன? - மலம் இறுகிப்போவது. மலம் கழிப்பதில் சிக்கல். மலம் முழுவதுமாகப் போகவில்லை என்கிற உணர்வு, மலம் கொஞ்சம்கூடப் போகாமல் ஆசனவாயை அடைத்துக்கொள்வது போன்ற நிலைமைகளை ‘மலச்சிக்கல்' என்று அழைக்கிறோம். மருத்துவ மொழியில் சொன்னால் ஒருவருக்கு வாரத்துக்கு மூன்று முறைக்குக் குறைவாக மலம் போவது ‘மலச்சிக்கல்' எனப்படும்.

நாம் சாப்பிட்ட உணவு இரைப்பை, முன் சிறுகுடல், சிறுகுடல் என்று பயணம் செய்து தன்னிடமுள்ள சத்துகளையெல்லாம் ரத்தத்துக்குக் கொடுத்துவிட்டு, சக்கை உணவாகப் பெருங்குடலுக்கு வரும். அதில் 80 சதவீதம் தண்ணீர்தான் இருக்கும். இந்தத் தண்ணீரில் பெரும்பகுதியை உறிஞ்சி எடுத்துக்கொண்டு சுமார் 250 மி.லி. அளவில் மலத்தில் வெளியேற்ற வேண்டியது பெருங்குடலின் வேலை. சமயங்களில் அது தண்ணீர் முழுவதையும் உறிஞ்சிக்கொள்ளும். இதனால் மலம் கட்டியாகி மலச்சிக்கலை ஏற்படுத்தும். இப்படித் தண்ணீர் அதிகமாக உறிஞ்சப்படுவதை ஊக்கப்படுத்தப் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றைத் தவிர்த்தால் மலச்சிக்கல் ஏற்படாது.

மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணி நம் உணவு முறை. கொழுப்பு மிகுந்த மேற்கத்திய உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது. பால் சார்ந்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது, பிட்ஸா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவு வகைகளையும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் அதிக அளவில் சாப்பிடுவது. நார்ச்சத்துள்ள உணவு வகைகளைக் குறைவாகச் சாப்பிடுவது. தண்ணீர் குறைவாகக் குடிப்பது. காய்கறி, கீரை, பழங்களைச் சாப்பிடாதது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள்தான் பலருக்கும் மலச்சிக்கலை உண்டாக்குகின்றன.

அடுத்து, தினமும் மலம் கழிக்கும் முறை சரியாக அமையாவிட்டால், அது நாளடைவில் மலச்சிக்கலுக்கு வழி வகுக்கும். குறிப்பாக, மலம் வருகிற உணர்வு உண்டாகும்போது கழிப்பறை அருகில் இல்லாதது, முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பது, பயணத்தில் இருப்பது போன்ற காரணங்களால் மலம் கழிப்பதைத் தவிர்த்தால் காலப்போக்கில் பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகள் செயலிழந்து மலத்தை வெளியேற்ற வேண்டும் என்கிற உணர்வைத் தெரிவிக்காது. இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படும்.

வேறு உடல் பிரச்சினைகளுக்காக நாம் சாப்பிடும் மருந்துகளும் மலச்சிக்கலுக்குக் காரணமாகலாம். எடுத்துக்காட்டாக, வயிற்றுப் புண்ணுக்குச் சாப்பிடப்படும் ‘அலுமினியம்’, ‘கால்சியம்’ கலந்துள்ள ‘ஆன்டாசிட்’ மருந்துகள், இரும்புச்சத்து மாத்திரைகள், வயிற்றுவலி மாத்திரைகள், வலிப்பு மருந்துகள், மன அழுத்த மருந்துகள், ‘ஓபியம்’ கலந்த வலிநிவாரணிகள் மலச்சிக்கலை ஏற்படுத்துகிற மருந்துகளில் முக்கியமானவை. இன்னொன்று, மலச்சிக்கலைப் போக்குவதற்காக பேதி மாத்திரைகளைச் சாப்பிடுகிறோம். ஆனால், அந்த பேதி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டாலும் மலச்சிக்கல் உண்டாகும்.

காய்ச்சல், வாந்தி, பசிக் குறைவு போன்ற பொதுவான பிரச்சினைகள் ஏற்படும்போதும், வெயிலில் அதிகம் அலையும்போதும் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அப்போது மலச்சிக்கல் ஏற்படும். மூல நோய், ஆசனவாய் வெடிப்பு, ஆசனவாய் சுருங்குதல், குடல் அடைப்பு, குடலில் கட்டி, பெருங்குடல் புற்றுநோய், ‘டைவர்ட்டிகுலைட்டிஸ்’ எனும் குடல் தடிப்பு நோய், சர்க்கரை நோய், தைராய்டு குறைவாகச் சுரப்பது, பேரா தைராய்டு அதிகமாகச் சுரப்பது, குடலிறக்கம், பித்தப்பைக் கற்கள், பார்க்கின்சன் நோய், மூளைத் தண்டுவட நோய்கள், மன அழுத்தம், தூக்கமின்மை ஆகிய பாதிப்புகள் இருக்கும்போது மலச்சிக்கல் ஒரு முக்கிய அறிகுறியாக வெளிப்படும்.

மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் ஆசனவாயில் விரிசல் ஏற்பட்டு ரத்தக்கசிவு உண்டாகும். அஜீரணம், வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம், குடலிறக்கம், குடல் அடைப்பு, சிறுநீர் அடைப்பு, நெஞ்சுவலி, மயக்கம் ஏற்படலாம்.

எனவே, மலச்சிக்கலுடன் கீழ்க்காணும் அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்:

1. மூன்று வாரத்துக்குமேல் மலச்சிக்கல் பிரச்சினை தொடரும்போது.

2. மலம் போவதில் சிக்கல் உண்டாகி வயிறு வலிக்கும்போது.

3. குமட்டல் மற்றும் வாந்தி வரும்போது.

4. மலம் கழிக்கும்போது ஆசனவாய் வலித்தால்.

5. மலத்துடன் ரத்தம், சீழ், சளி வெளியேறும்போது.

6. உடல் எடை குறையும்போது.

7. காய்ச்சல், தலைவலி, வாய்க் கசப்பு இருந்தால்.

8. மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் மாறிமாறி வந்தால்.

9. வயிற்று உப்புசம், பசிக் குறைவு இருந்தால்.

10. சுவாசத்தில் கெட்ட வாசனை வந்தால்.


மலச்சிக்கலை தவிர்ப்பது எப்படி? - ஆரோக்கியமாக உள்ள ஒருவர் சரியான உணவு முறையைப் பின்பற்றி, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடித்து, தினமும் உடற்பயிற்சி செய்து, மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததும் மலம் கழித்துவிடுகிற பழக்கத்தைப் பின்பற்றினாலே போதும். தினமும் சரியான / முறையான நேரத்தில் மலம் கழிப்பது வழக்கமாகிவிடும். இதன் பலனால், அவருக்கு மலச்சிக்கல் ஏற்படுகிற வாய்ப்பு 90 சதவீதம் குறைந்துவிடும்.

நாம் சாப்பிடும் உணவு வகைகளில் நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு. தினை, வரகு, கொள்ளு போன்ற முழுத் தானிய உணவு வகைகள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும். வாழைத்தண்டு, காரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகள், பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்புகள், கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, மாம்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகம். இவற்றை தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மிளகு, ஓமம், கொத்துமல்லி, மிளகாய் போன்றவற்றிலும் நார்ச்சத்து அதிகம்.

தினமும் 3 லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, தேநீர், மென்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு, இளநீர், பழச்சாறுகள் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும். இனிப்பு வகைகளையும் கொழுப்பு உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். விரைவு உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இரவில் இரண்டு பழங்களைச் சாப்பிட வேண்டும். பருவத்துக்குத் தகுந்த எந்தப் பழத்தையும் சாப்பிடலாம்.

x