ஏழை மாணவர்களுக்காக ரூ. 70 லட்சத்தில் நூலகம்; அரியலூர் நெகிழ்ச்சி - தந்தை கனவை நனவாக்கிய மகள்!


அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் மாணவர்களுக்காக அரசுப் பள்ளி ஆசிரியை அல்லி கட்டியுள்ள நூலகம். | படம்: பெ.பாரதி |

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமழபாடியைச் சேர்ந்தவர் அ.ஆறுமுகம். ஓய்வு பெற்ற பேராசிரியர். இவர், சங்க இலக்கியம், திருக்குறள் ஆய்வு என 45 நூல்களை எழுதி பாவேந்தர் பதிப்பகம் சார்பில் வெளியிட்டுள்ளார். இவரது மகள் அல்லி(56). கும்பகோணத்தை அடுத்த நாச்சியார் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியையாக பணிபுரிந்து வருகிறார். திருமழபாடியில் உள்ள தனது தந்தை வீட்டிலேயே வசித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது தந்தையின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில், திருமழபாடியில் ரூ.70 லட்சம் செலவில் ‘பாவேந்தர்’ பெயரில் நூலகம் அமைத்துள்ளார். இதில், திருக்குறள், வரலாற்று நூல்கள், போட்டித் தேர்வுக்கான நூல்கள், சிறுகதைகள், இலக்கிய புத்தகங்கள், மகாபாரதம், ராமாயணம், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு என 7 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. மேலும், இங்கு மாணவர்கள், பொதுமக்கள் அமர்ந்து படிக்கும் வகையில், மேஜை, நாற்காலி வசதிகள் உள்ளன. இணையதள வசதியும், நகல் எடுக்கும் இயந்திரமும் உள்ளது.

முதல் தளத்தில் புத்தகங்களும், இரண்டாம் தளத்தில் வகுப்பறையும் கொண்ட இந்த நூலகத்தில், மாணவர்களுக்கு பல்வேறு வகையான திறனறித் தேர்வுகளுக்கும், நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்கும், போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியையின் அறப்பணி

இதுகுறித்து ஆசிரியை ஆ.அல்லி ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: எனது தந்தையின் கனவு இது. அரசு பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஏதாவது நாம் உதவி செய்ய வேண்டும் என எனது தந்தை விரும்பினார். அதை நான் முன்னெடுத்து இந்த பணிகளை செய்துள்ளேன். இங்கு பொதுமக்களும் வந்து புத்தகங்கள் படிக்கலாம்.

உறுப்பினர் சேர்க்கை இலவசம். காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை நூலகம் திறந்திருக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிப்பு தொடர்பான நூல்களை தேவைப்பட்டால் இலவசமாக நகல் எடுத்துக் கொள்ளலாம்.

இங்கு குடிநீர், கழிப்பறை வசதியும் உள்ளது. வரும் நாட்களில் மாணவர்களுக்கு படிப்பு தொடர்பாக வேறு எந்த உதவிகள் தேவைப்பட்டாலும் செய்து கொடுக்க தயாராக உள்ளோம். இது எனது தந்தைக்கு நான் செய்யும் கடமை. இதற்கு எனது சகோதரர்கள், அவர்களது குடும்பத்தார் பெரிதும் உதவியாக உள்ளனர் என்றார்.

x