திருச்சி கிழக்கு ஆர்டிஓ அலுவலகம்; அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி


திருச்சி: திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் போதிய அடிப்படை வசதிகளின்றி வாடகைக் கட்டிடத்தில் கடந்த 12 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கிறது என வேதனையுடன் தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.

2013-ல் தொடங்கப்பட்ட திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், முதலில் சஞ்சீவி நகரில் ஒரு வாடகைக் கட்டிடத்திலும், 2017 முதல் தற்போது வரை தேவதானம் பகுதியில் ஓயாமரி சுடுகாடு அருகே வாடகை கட்டிடத்திலும் இயங்கி வருகிறது.

வட்டார போக்குவரத்து அலுவலர் உட்பட 13 பணியாளர்களுடன் இயங்கி வரும் இந்த அலுவலகத்துக்கு ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினமும் 200-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். ஆனால், அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள், போதிய இடவசதி இல்லாத நெருக்கடியான சூழலில் மன அழுத்தத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.

அதேபோல, அங்கு வரும் பொது மக்களுக்கு காத்திருப்பு அறை, கழிப்பறை, குடிநீர் வசதி ஆகியவை இல்லை. இதனால் அருகில் உள்ள கடைகளில் தஞ்சமடைகின்றனர். இது தவிர, பிரதான சாலையிலிருந்து அலுவலகத்துக்குச் செல்லும் மண்சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.

மேலும், புதிய வாகனங்களுக்கு பதிவு சான்று வழங்குவதற்கான ஆய்வு, வாகனங்கள் புதுப்பித்தலுக்கான ஆய்வு, ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான சோதனை ஓட்டம் ஆகிய பணிகளை மேற்கொள்ள இந்த அலுவலகத்தில் எவ்வித வசதியும் இல்லாததால், இங்கிருந்து சுமார் 1.5 கி.மீ. தொலைவில் உள்ள கும்பகோணத்தான் சாலையில் வைத்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இப்பணிகளை செய்து வருகின்றனர்.

பொதுமக்களிடமிருந்து ஒவ்வொரு சேவைக்கும் கட்டணம் வசூலிக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகம், சுமார் 12 ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதியுமின்றி இயங்கி வருவது வேதனையான விஷயம் என பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். எனவே, திருச்சி கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு விரைவில் அனைத்து வசதிகளுடன் சொந்தக் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

x