துரித உணவுகள், ரெடிமேட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், செயற்கை வண்ண உணவுகள் நம்மிடம் புகுந்துகொண்ட பிறகு, அல்சர் தொல்லை பெரும் பாதிப்புகளை உருவாக்கி வருகிறது.
தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக ‘பெப்டிக் அல்சர்’ (Peptic ulcer) என்கிறோம். இரைப்பையில் புண் ஏற்பட்டால் ‘கேஸ்ட்ரிக் அல்சர்’ (Gastric ulcer) என்றும், முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் ‘டியோடினல் அல்சர்’ (Duodenal ulcer) என்றும் அழைக்கிறோம்.
காரம் நிறைந்த, புளிப்பு மிகுந்த, மசாலா கலந்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது; மது அருந்துதல், புகைபிடித்தல், மென் குளிர்பானம், காபி, தேநீர் பானங்களை அதிகமாகக் குடிப்பது; ஸ்டீராய்டு மாத்திரைகள், ஆஸ்பிரின், புரூஃபென் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி சாப்பிடுவது; உணவை நேரம் தவறிச் சாப்பிடுவது, அதிகச் சூடாகச் சாப்பிடுவது, பட்டினி கிடப்பது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள் இரைப்பைப் புண்ணுக்கு வரவேற்பாக அமைகின்றன.
இந்த நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான். இதைத் தொடர்ந்து அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லாமல் இருக்கும். குறைந்த அளவு உணவைச் சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உண்டாகும். பிறகு, வயிற்றில் வலி தோன்றும். குறிப்பாக, இரைப்பை காலியாக உள்ள நள்ளிரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி வரும். புண் உள்ள இடத்தில் அமிலம் படுவதால், இந்த வலி ஏற்படுகிறது.
இரைப்பைப் புண் தொடர்ந்து இருந்தால், அது புற்றுநோயாக மாறுவதற்கு அதிக வாய்ப்புண்டு. அதிலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வாய்ப்பு சற்று அதிகம். அப்போது புண்ணில் ரத்தக் கசிவு ஏற்பட்டு ரத்த வாந்தி வரலாம். புண் இரைப்பையில் இல்லாமல், முன்சிறுகுடலில் இருந்தால், குடல் அடைப்பு ஏற்படுவதுண்டு. சமயங்களில் குடலில் துளை விழுவதற்கான வாய்ப்பும் உள்ளது. அல்சர் வருவதைத் தடுக்க நேரத்துக்கு உணவைச் சாப்பிட வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
கவலை, கோபம், எரிச்சல் போன்ற மனநிலைகளின்போது சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சாப்பிடும்போது சந்தோஷமான மனநிலைக்கு மாறிவிடுங்கள். இரைப்பைப் புண் உள்ளவர்கள் அடிக்கடி சிறிது சிறிதாக உணவை உண்பது நல்லது. மசாலா மிகுந்த, காரம் நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை எவ்வளவு குறைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும்.
வேகவைத்த இந்தியப் பாரம்பரிய உணவு வகைகளை அதிகப்படுத்துங்கள். விரைவு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை ஓரங்கட்டுங்கள். அதிக இனிப்புப் பண்டங்களையும், புளித்த உணவுகளையும் ஒதுக்குங்கள். கீரைகளில் மணத்தக்காளியும், காய்கறிகளில் முட்டைக்கோஸும் இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்த உதவுகின்றன. எந்தக் காரணத்தைக் கொண்டும் பட்டினி கிடக்கக் கூடாது. சாப்பிட்டதும் படுக்கக்கூடாது.