தமிழ்நாடு வேளாண் பல்கலை.யில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பாராட்டினார்.
கோவையில் உள்ள வேளாண் பல்கலை.யில் நேற்று 45-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், பல்கலை. வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு 297 பேருக்கு பட்டங்களை வழங்கினார். நேரடியாக 1,536 பேரும், அஞ்சல் வழியாக 2,898 பேரும் பட்டச் சான்றிதழ்களை பெற்றனர்.
பல்கலை. துணைவேந்தர் கீதாலட்சுமி வரவேற்றுப் பேசும்போது, "தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், டேட்டா அனாலிசிஸ், 3டி பிரிண்டிங், பயோ-ஹைட்ரஜன் உற்பத்தி துறையில் ஆய்வுப் படிப்புகளை வழங்கி வருகிறது. ‘செம்மை மதார்’ திட்டத்தின் மூலம் பெண்களிடையே தொழில்முனைவை ஊக்குவிக்கிறது. 52 மகளிர் ஸ்டார்ட்அப்-களை தொடங்கி உள்ளனர். இணையவழி சந்தையான www. tnauagricart.com மூலம் விவசாய இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் மாதம் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வருவாய் கிடைக்கிறது. 2024-ல் 11 தயாரிப்பு காப்புரிமைகள், 58 வடிவமைப்பு காப்புரிமைகள், 2 புவி சார் குறியீடுகள் மற்றும் 28 பதிப்புரிமைகளைப் பெற்றுள்ளோம். மேலும், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட 99 தொழில்நுட்பங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன" என்றார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை தோல் ஏற்றுமதி கழக செயல் இயக்குநர் ஆர்.செல்வம் பேசியதாவது: வேளாண்மை பல்கலைக்கழகம் கல்வி, ஆராய்ச்சித் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. புதிய கண்டுபிடிப்புகள், பயிர் வகைகளில் மரபணு மேம்பாடு ஆகியவற்றின் மையப் பகுதியாக விளங்குகிறது. புவி சார் கிராம வரைபடங்கள், டிஜிட்டல் பயிர் ஆய்வுகள் என வேளாண் துறைக்கு டிஜிட்டல் மறுவடிவமைப்பை அளித்துள்ளது. இ-நாம் திட்டத்தில் 2 கோடி விவசாயிகள் மற்றும் 2.5 லட்சம் வர்த்தகர்களை மேம்படுத்தி உள்ளது.
இந்தியாவில் வேளாண் துறை சார்ந்த ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 2800-ஆக அதிகரித்துள்ளது. இது மாணவர்களின் புதுமையான திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது. 2050-ல் உலக அளவில் 10 பில்லியன் மக்களின் உணவுத் தேவை 70 சதவீதமாக அதிகரிக்க உள்ளது. 10-ல் ஒரு பங்கு மக்கள் பசியால் வாடும் சூழல் ஏற்படும். மாணவர்கள் ஒரு விதையை உருவாக்கினால், ஒட்டுமொத்த நாட்டை மாற்றலாம். அதேபோல விவசாய நடைமுறையை மாற்றினால், தலைமுறையை மாற்றலாம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், பல்கலை. பதிவாளர் தமிழ்வேந்தன், முதன்மையர் வெங்கடேச பழனிசாமி, முதுநிலைப் பட்ட மேற்படிப்பு பயிலக முதன்மையர் சுரேஷ்குமார், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பாலசுப்பிரமணி மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் பங்கேற்றனர்