தஞ்சாவூா்: தஞ்சாவூர் கோட்டை அகழியை அழகுபடுத்து வதாகக் கூறி, அந்தப் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகளை அகற்றிய மாநகராட்சி நிர்வாகம், தற்போது அங்கு மீன் மார்க்கெட் அமைத்துள்ளது. இதற்காகத் தான் தங்களை அங்கிருந்து மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியதா என ஏற்கெனவே அங்கு குடியிருந்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாநகரை அழகுபடுத்தும் வகையில் பூங்காக்கள், நடைபாதைகள், சாலைகள், பழமையான கட்டிடங்கள் ஆகியவற்றை புதுப்பிக்க 2019-ம் ஆண்டு சுமார் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் கோட்டை அகழியை சுற்றிலும் உள்ள வீடுகளை அகற்றிவிட்டு, அகழியை சுத்தம் செய்து அழகுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக தென் கீழ அலங்கம் முதல் கொடிமரத்து மூலைவரை கோட்டை அகழி பகுதியில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்த கூலித் தொழிலாளர்களின் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டன.
அதன்பின், அங்கு நடைபாதை எதுவும் அமைக்கப்படாமல், சாலையோர தடுப்புகள் மட்டுமே அமைக்கப்பட்டன. பின்னர், கரோனா காலத்தில் தென் கீழ் அலங்கம் பகுதியில் தற்காலிகமாக மீன் மார்க்கெட் ஏற்படுத்தப்பட்டது. அதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால், அங்கிருந்த தற்காலிக மீன் மார்க்கெட் அகற்றப்பட்டு, பீரங்கிமேடு எதிரே இருந்த காலியிடத்துக்கு மாற்றப்பட்டது.
இந்தநிலையில், மீன் மார்க்கெட் அமைந்துள்ள இடம் முதல், கொடிமரத்து மூலை வரை ஏற்கெனவே வீடுகள் அகற்றப்பட்ட இடத்தில், தற்போது மொத்தம் மற்றும் சில்லறை விற்பனைக்கான மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், மீன் மார்க்கெட் கழிவுகளை அருகில் உள்ள அகழியில் கொட்டுவதால், அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகரை அழகுபடுத்துவதற்காக, ஆக்கிரமிப்பு எனக் கூறி, அகழிமேட்டில் இருந்த வீடுகள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது அங்கு மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளதால், இதற்காகத் தான் தங்களை மாநகராட்சி நிர்வாகம் அங்கிருந்து அப்புறப்படுத்தியதா? என ஏற்கெனவே அங்கு குடியிருந்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறியது.. நாங்கள் 2 தலைமுறைகளாக கோட்டை அகழி மேட்டில் குடிசை வீடுகள் கட்டி குடியிருந்து வந்தோம். ஸ்மார்ட் சிட்டிக்காக இந்த இடத்தை அழகுபடுத்தப் போவதாகக் கூறி, எங்களை 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவசர அவசரமாக அப்புறப்படுத்தினர். ஆனால், தற்போது அந்த இடத்தில் மீன் மார்க்கெட் அமைத்துள்ளனர். அந்த இடத்தை பார்க்கும் போதெல்லாம் எங்களுக்கு வேதனையாக உள்ளது என்றனர்.
‘அழகிய தஞ்சை’ திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் ஆர்.ரவிச்சந்திரன் கூறியது.. அகழி மேட்டில் வீடுகளை அகற்ற முனைப்பு காட்டிய மாநகராட்சி நிர்வாகம், அந்த இடத்தை அழகுபடுத்த தவறிவிட்டது. தற்போது மீன் மார்க்கெட் அமைத்து அந்த பகுதியை சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாக்கியுள்ளது என்றார்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது.. ‘‘தென்கீழ் அலங்கம் முதல் கொடிமரத்து மூலை வரை கோட்டை அகழி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வீடுகள் அகற்றப்பட்டன. பின்னர் நடைபாதைக்காக முதலில் சாலையோரம் எவர்சில்வர் கம்பிகளால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், நடைபாதைகள் அமைக்கும் முன்னர் அங்கு மீன் மார்க்கெட் வந்ததால், அந்த திட்டம் கைவிடப்பட்டது’’ என்றனர்.