பெரம்பலூர்: போக்குவரத்துத் துறை அமைச்சர் தொகுதி அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் முன்பதிவு செய்து பயணிக்கும் அரசுப் பேருந்துகள் வசதி இல்லாததால் பயணிகள் அவதியடைகின்றனர். பெரம்பலூரில் தனியார் பல்கலைக்கழகம், 2 தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருந்தியல், இயன்முறை மருத்துவம், வேளாண்மைக் கல்லூரிகள், பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள், தனியார் டயர், காலணி தொழிற்சாலைகள் உள்ளன.
இவற்றில் கல்வி கற்கவும், பணிபுரியவும் ஆயிரக்கணக்கான பேர் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து பெரம்பலூர் வந்து செல்கின்றனர். இவர்களில் மிகப்பெரும்பாலானோர் சென்னை, பெங்களூரு, கோவை நகரங்களுக்கு அடிக்கடி சென்று வருகின்றனர். ஆனால், பெரம்பலூரிலிருந்து முன்பதிவு செய்து பயணிக்கும் வகையிலான அரசுப் பேருந்து வசதி இல்லாததால் இந்த பயணிகள் மிகவும் அவதியடைகின்றனர். இருக்கைகள் காலியாக உள்ள பேருந்துகள் எப்போது பெரம்பலூர் வரும் என எதிர்பார்த்து தங்களது பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.
இருக்கைகள் காலியாக இல்லையெனில் தங்களது பயணத்தை ரத்து செய்து விடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இல்லாவிட்டால், திருச்சி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் ஆகிய ஊர்களுக்குச் சென்று சென்னை, பெங்களூரு, கோவைக்கு பேருந்துகளை பிடித்து பயணத்தை தொடர்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சிவா ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்புவரை நாள்தோறும் இரவு 10 மணிக்கு முன்பதிவு செய்து பயணிக்கும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து இயக்கப்பட்டது. கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அந்த பேருந்து, அதன்பிறகு மீண்டும் இயக்கப்படவில்லை.
பெரம்பலூரில் இருந்து முன்பதிவு செய்து பயணிக்கும் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பலமுறை மனுக்களாகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குன்னம் தொகுதி எம்எல்ஏவும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எஸ்.எஸ். சிவசங்கரிடம் நேரிலும் கோரிக்கை விடுத்தும் ஏனோ இன்னும் எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றார்.