பழநி: ஆயக்குடி கொய்யா, நத்தம் புளி, கப்பல்பட்டி கரும்பு முருங்கைக்கு புவிசார் குறியீடு பெற வழிவகை செய்யப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி கொய்யா, நத்தம் புளி, கப்பல்பட்டி கரும்பு முருங்கை உட்பட 5 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.15 லட்சத்தில் திட்டமிட்டு இருப்பதாக தமிழக வேளாண் பட்ஜெட்டில் உழவர் நலன் மற்றும் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்த அறிவிப்பை திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
பழநியை அடுத்துள்ள ஆயக்குடி, சட்டப்பாறை, அமரப்பூண்டி, சத்திரப்பட்டி, கோம்பைப்பட்டி, கணக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில் லக்னோ-49, பனாரஸ் ரக கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் கொய்யாவின் சுவை தனித்துவமானது. அதனால் வெளிமார்க்கெட்டில் ஆயக்குடி கொய்யாவுக்கு தனி மவுசு உண்டு.
தமிழகத்திலேயே குறிப்பாக கொய்யாவுக்கென பிரத்தியேகமாக, பழநியை அடுத்த ஆயக்குடியில்தான் தனி சந்தை செயல்படுகிறது. இந்த சந்தை காலை 7 மணிக்கு களை கட்டத் தொடங்கிவிடும். காலை 9 மணிக்குள் அனைத்து கொய்யாவும் விற்பனை செய்யப்பட்டு விடும். தினமும் 30 டன் முதல் 50 டன் வரை விற்பனையாகும்.
கொய்யாவில் இருந்து ஜூஸ், மிட்டாய்கள் தயாரிப்பதற்கு இங்கிருந்து அதிகளவில் விற்பனைக்கு செல்கிறது. ஆயக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக விளையும் கொய்யாவுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை ஆகும். தற்போது, அதற்கான முயற்சியை தமிழக அரசு முன்னெடுக்கும் என்ற அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல், திண்டுக்கல் மாவட்டத்தில் 3,500 ஹெக்டேர் பரப்பளவில் புளிய மரங்கள் உள்ளன.
இதில் 80 சதவீத மரங்கள் நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளன. நத்தம் பகுதியில் புளி அறுவடை, விதை நீக்குதல், நார் எடுத்தல் உள்ளிட்ட பணிகள் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். நத்தம் பகுதியில் விளையும் புளி திண்டுக்கல் நாகல் நகரில் வாரந்தோறும் திங்கள்கிழமை புளிச்சந்தைக்கு கொண்டு வரப்படும். மேலும், நத்தம் பகுதியில் இருந்து தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
நத்தம் பகுதியில் விளையும் புளி சுத்தமாக இருக் கும் என்பதால் பலரும் விரும்பி வாங்குகின்றனர். ஒட்டன்சத்திரம், சாலைப்புதூர், இடையகோட்டை, கள்ளிமந்தையம், மார்க்கம்பட்டி, அம்பிளிக்கை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் செடி முருங்கை, கரும்பு முருங்கை, மர முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கப்பல்பட்டி பகுதியில் விளையும் கரும்பு முருங்கை தனித்துவம் வாய்ந்தது.
இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திராவுக்கும் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.இந்நிலையில் தற்போது கப்பல்பட்டி கரும்பு முருங்கைக்கு புவிசார் குறியீடு பெற வழிவகை செய்யப்படும் என்ற அறிவிப்பால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கெனவே, திண்டுக்கல் பூட்டு, சிறுமலை வாழைப்பழம், பழநி பஞ்சாமிர்தம் மற்றும் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஆயக்குடி கொய்யாவுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை. விரைவில் அது நிறைவேறும் என்ற நம்பிக்கை வேளாண் பட்ஜெட் அறிவிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. வரும் காலங்களில் கொய்யா சாகுபடி பரப்பு இன்னும் அதிகரிக்கும்.
இதேபோல், தமிழகம் முழுவதும் முருங்கை, புளி சாகுபடி செய்யப்பட்டாலும், தனித்தன்மைக்காக நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கைக்கு புவிசார் குறியீடு கிடைத்தால் அவற்றின் தனித்தன்மைகள் பாதுகாக்கப்படும். பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி செய்ய தரமான புளி, முருங்கை கிடைப்பது உறுதி செய்யப்படும். 5 விளைபொருட்களில் 3 பொருட்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் விளைபவை என்பதால் விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது என்று கூறினர்.