கோவை: கோவை மாநகரில், ‘பீக் ஹவர்ஸ்’ நேரங்களில் நுழையும் கனரக வாகனங்களாலும், அதிவேகமாக செல்லும் வாகனங்களாலும் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் அதிகரிக்கின்றன. இதைத் தடுக்க காவல்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாநகரில் ஆண்டுதோறும் அதிகரித்துவரும் வாகனங்களின் எண்ணிக்கை காரணமாக அனைத்து சாலைகளிலும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கிறது. தடை செய்யப்பட்ட நேரங்களில் கனரக வாகனங்கள் நகருக்குள் வருவது மற்றும் அதிவேக வாகனங்களால் விபத்துகள் மற்றும் நெரிசல் தொடருகிறது.
இதுகுறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் நுகர்வோர் அமைப்பின் செயலர் நா.லோகு கூறும்போது, ‘‘மாநகரில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதுகாப்பாக செல்ல ‘பீக் ஹவர்ஸ்’ திட்டம் நடைமுறையில் உள்ளது. காலை 8 முதல் 11 மணி வரையும், மாலை 4 முதல் 8 மணி வரையும் ‘பீக்ஹவர்ஸ்’ நேரங்களாக அறிவிக்கப்பட்டு கனரக வாகனங்கள் நகரில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இத்தடையை மீறி, பீக்ஹவர்ஸ் நேரங்களில், நகருக்குள் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகளை ஏற்றி வரும் லாரிகள், புதிய வாகனங்களை ஏற்றி வரும் கன்டெய்னர் லாரிகள், தண்ணீர் லாரிகள், போர்வெல் லாரிகள், சாதாரண லாரிகள், ஈச்சர் லாரிகள் என கனரக வாகனங்கள் நுழைந்து விடுகின்றன. இதனால் நெரிசல் கடுமையாக அதிகரிக்கிறது. ஏற்கெனவே, அவிநாசி சாலையில் மேம்பாலப் பணியால், சாலையின் அகலம் குறைந்து நெரிசல் நிலவுகிறது. வாகனங்கள் அங்குலம் அங்குலமாக நகர வேண்டியுள்ளது.
குறிப்பாக, காந்திமாநகர் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட சில முக்கிய சாலைகளில் கனரக வாகனங்கள் தடையை மீறி நுழைந்து விட்டால் அந்த சாலை முடியும் வரை, அந்த லாரியின் பின்னாலேயே மற்ற வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்ட நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்.
தடையை மீறி நுழையும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், தண்ணீர் லாரிகள், பெட்ரோல், டீசல் ஏற்றிவரும் லாரிகளை காலை முதல் இரவு வரை நகரில் நுழைய தடை விதிக்க வேண்டும். ஏனெனில், தண்ணீர் உள்ளிட்ட திரவங்கள் டேங்கருக்குள் ததும்புவதால் பிரேக் போட்டாலும் சற்று தூரம் தள்ளிச் சென்றுதான் நிற்கும். இதனால் விபத்துகள் மட்டுமின்றி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன’’ என்றார்.
அதிவேக வாகனங்கள்: சமூக செயல்பாட்டாளர் ராஜ்குமார் கூறும்போது, ‘‘மாநகர சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி 60, 70, 80 கி.மீ வேகத்தில் வாகனங்களை ஓட்டிச்செல்கின்றனர். வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்தால் மேலும் அதிவேகமாக செல்கின்றனர். அதிவேக இருசக்கர வாகன ஓட்டிகளால், சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றிச் செல்பவர்களும் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, காவல்துறையினர் தணிக்கையை தீவிரப்படுத்தி அதிவேக வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து, வாகனம் பறிமுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.
சமையல் எரிவாயு, பெட்ரோல், ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகளுக்கு நகரில் நுழைய நேரக் கட்டுப்பாடு இல்லை. ஆனால், இந்த வகை லாரிகளாலும் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ளது. குறிப்பாக, கணபதியில் காஸ் குடோன் உள்ளது. இந்த குடோனுக்காக வரும் காஸ் சிலிண்டர் ஏற்றி வரும் லாரிகள், எல்பிஜி ஏற்றி வரும் லாரிகள் அவிநாசி சாலையின் பீளமேடு, காந்திமாநகர் வழித்தடம் வழியாகவும், சத்தி சாலையின் காந்திபுரம், கணபதி, எஃப்.சி.ஐ சாலை வழியாகவும் நுழைந்து குடோனுக்கு வருகின்றன.
இந்த லாரிகள் வழக்கமான லாரிகளை விட அளவு பெரியதாக இருப்பதால், நகருக்குள் நுழைந்து குடோனுக்குச் செல்வதற்குள் அதன் பின்னால் வரும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு திண்டாட்டமாகி விடுகிறது. அத்தியாவாசியப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகளுக்கும் நேரக்கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
சென்னையை போல்... சென்னை மாநகரில், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல, அண்ணா சாலை உள்ளிட்ட 22 முக்கிய சாலைகளில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் நுழைய போலீஸார் முற்றிலும் தடை விதித்துள்ளனர். அந்த நடைமுறையை, கோவையில் அவிநாசி சாலை உள்ளிட்ட6 பிரதான சாலைகளில் பின்பற்றினால் நெரிசல் மேலும் குறையும். மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் அசோக்குமார் கூறும்போது, ‘‘மாநகரில் போக்குவரத்து காவலர்கள் மூலம் தினமும் ஆங்காங்கே வாகனத் தணிக்கை செய்யப்பட்டு, ‘பீக் ஹவர்ஸ்’ நேரத்தில் நகருக்குள் நுழையும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மாநகரில் சாலைகளுக்கு ஏற்ப வேக அளவு மாறுகிறது. அதேசமயம், 50 கி.மீ வேகத்துக்கு மேல் சென்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. முதல்முறை பிடிபட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் பிடிபட்டால் வாகனம் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அவிநாசி சாலை, குனியமுத்தூர், சரவணம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலமும், நேரடித் தணிக்கையின் மூலமும் அதிவேக வாகன ஓட்டிகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் சாலை விதிகளை பின்பற்றினால் விபத்துகளை தவிர்க்கலாம்’’ என்றார்.