அமெரிக்காவில் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட இந்திய மாணவர் பதார் கான் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் விரைவில் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார்.
இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே போர் நடைபெற்றபோது அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. சில பகுதிகளில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தும் போராட்டங்கள் நடைபெற்றன.
அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவான அமைப்புகள், தனிநபர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன்படி ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய மாணவி ரஞ்சனி ஸ்ரீனிவாசனை கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவில் இருந்து தானாக வெளியேறி தற்போது கனடாவில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.
இந்த சூழலில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய மாணவர் பதார் கான் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவர் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹமாஸ் ஆதரவாளர்கள் அனைவரும் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்