வெப்ப அலை: வேலூர் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!


வேலூர் மாவட்டத்தில் வெப்ப அலையின் தாக்கம் வரும் நாட்களில் அதிகளவில் இருக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 தனி படுக்கைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை வெப்பத்தில் தாக்கம் இயல்பை விடக் கூடுதலாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், எதிர்வரும் கோடை காலத்தில் வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க மேற்கொள்ளப் பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி ஆலோசனை நடத்தினார்.

இதில், மாவட்ட ஆட்சியர் பேசும்போது, ”உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கோடை காலங்களில் நாள்தோறும் குடிநீர் வழங்குவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள் அரசு அலுவலகங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். ஓ.ஆர்.எஸ். கரைசல்களும் வைத்திருக்க வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் துணியினால் ஆன தற்காலிக நிழற்கூரைகள் அமைக்க வேண்டும். வழிப்பாட்டு தலங்களில் பக்தர்கள் வசதிக்காகத் தரைவிரிப்பு அமைத்து அடிக்கடி தண்ணீர் தெளிக்க வேண்டும். கோடைகால தீ விபத்துக்களை உடனுக்குடன் அணைக்க தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெப்ப அலைகளினால் பாதிக்கப்படும் மக்களுக்குச் சிகிச்சை வழங்க 5 தனி படுக்கைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தனி மருத்துவக் குழு ஏற்படுத்த வேண்டும். பயன்படுத்தாத குவாரிகளில் தேங்கிய நீரில் பள்ளி மாணவர்கள் குளிப்பது, நீச்சல் பழகுவது போன்றவற்றைத் தடுக்க வேண்டும். வனத்துறையின் சார்பில் வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு தொட்டிகள் அமைத்து குடிநீர் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார்.

ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி

கோடை வெயில் பாதிப்புகள்: கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது உடலில் உப்புசத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். பச்சிளம் குழந்தைகள், சிறு வயதுக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிக அளவில் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

வெப்ப அலை பாதிப்புகளைத் தவிர்க்க...

* கோடை காலத்தில் அதிகளவு நீர் பருக வேண்டும்.

* சூடான பானங்கள் பருகுவதைத் தவிர்க்க வேண்டும்.

* அதிகளவு மோர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக் கஞ்சி, இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு, ஓ.ஆர்.எஸ்., கரைசலைப் பருகலாம்.

* பகல் நேரத்தில் வெளியில் செல்லும்போது குடிநீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும்.

* வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். திறந்த வெளியில் வேலை செய்யும் போது தலையில் பருத்தி துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும்.

* வீடுகளில் குளிர்ந்த காற்றோட்டம், சூரிய ஒளி நேரடியாகப் படும் ஜன்னல் மற்றும் கதவுகள் ஆகியவற்றைத் திரைச்சீலைகளால் மூட வேண்டும்.

* வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ யாரேனும் மயக்கம் அடைந்தால் உடனடியாக மருத்துவரையோ, ஆம்புலன்ஸையோ அழைக்க வேண்டும்.

* பாதிக்கப்பட்டவரின் உடைகளைத் தளர்த்தி ஐஸ்கட்டியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். குளிர்ந்த நீரை உடல் முழுவதும் தொடர்ந்து தெளித்து காற்றோட்ட வசதி தொடர்ந்து கிடைக்கச் செய்ய வேண்டும்.

* வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகளைக் கொடுக்கக் கூடாது.

x