புதுக்கோட்டை மக்களவை தொகுதியை மீட்டெடுக்கும் கனவு கலைந்து போகுமா?


மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், தொலைந்து போன புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீட்டெடுக்கும் கனவு, கலைந்து போய்விடுமோ என அம்மாவட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியாக இருந்தபோது, புதுக்கோட்டை மாவட்டத்துக்குட்பட்ட குளத்தூர், அறந்தாங்கி, புதுக்கோட்டை, ஆலங்குடி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்துக்குட்பட்ட பேராவூரணி, பட்டுக்கோட்டை ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் இருந்தன. இதுதவிர, புதுக்கோட்டை மாவட்டத்துக்குட்பட்ட திருமயம் தொகுதி, சிவகங்கை மக்களவை தொகுதியுடன் இணைக்கப்பட்டிருந்தது.

ஆனால், தொகுதி மறுசீரமைப்பின்போது புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி இல்லாமல் போனது. அதன்படி, குளத்தூர் தொகுதி நீக்கப்பட்டு விராலிமலை, கந்தர்வக்கோட்டை தொகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. அதாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, திருமயம், விராலிமலை, ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளானது.

மேலும், புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் திருச்சி மக்களவைத் தொகுதியுடனும், திருமயம், ஆலங்குடி தொகுதிகள் சிவகங்கை தொகுதியுடனும், விராலிமலை தொகுதி கரூர் தொகுதியுடனும், அறந்தாங்கி தொகுதி ராமநாதபுரம் தொகுதியுடனும் இணைக்கப்பட்டன.

சிதறடிக்கப்பட்ட தொகுதி - ஒரு மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் சிதறடிக்கப்பட்டு, 4 மக்களவைத் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் அதிருப்தியடைந்தனர். இதனால், 2009 மக்களவைத் தேர்தலில் மீண்டும் புதுக்கோட்டை தொகுதியை உருவாக்கக் கோரி நோட்டாவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதன் தாக்கம் அடுத்தடுத்த மக்களவை தேர்தலிலும் இருந்தன. எனினும், அடுத்து வரும் தொகுதி மறுவரையறையின்போது உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அத்துடன், ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் புதுக்கோட்டை தொகுதியை மீட்டெடுப்பேன் என்ற வாக்குறுதியை அனைத்து வேட்பாளர்களும் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு தொகுதி மறுவரையறை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் அனைத்துக் கட்சி கூட்டமும் நடத்தப்பட்டது. தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் , புதுக்கோட்டை மக்களவை தொகுதி கனவு கலைந்து போகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எம்எல்ஏ எம்.சின்னதுரை

முதல்வரை சந்திப்போம்: கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை கூறியது: மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரை கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. புதுக்கோட்டை தொகுதியை உருவாக்க வேண்டும் என்பதில் எம்.பிக்கள் கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, துரை வைகோ, நவாஸ்கனி, அப்துல்லா ஆகியோர் உறுதியாக உள்ளனர். மேலும், எம்எல்ஏக்களும் உறுதியாக இருக்கிறோம். தேவைப்பட்டால் முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம். நிச்சயம் புதுக்கோட்டை மக்களவை தொகுதி உருவாக்கப்படும் என்றார்.

ந.தினகரன்

எல்லா தகுதியும் உள்ளது: இது குறித்து தொகுதி மீட்பு பிரச்சாரம் மேற்கொண்ட மகாத்மா காந்தி சமூக நலப்பேரவையின் தலைவர் ந.தினகரன் கூறியது: தமிழகத்தில் தற்போதுள்ள 39 மக்களவைத் தொகுதியின் எண்ணிக்கையும் குறையக்கூடாது. புதுக்கோட்டை தொகுதியும் உருவாக்கப்பட வேண்டும். தலா ஒரு மாநகராட்சி, நகராட்சி, 8 பேரூராட்சிகள், 497 ஊராட்சிகள், 13 ஒன்றியங்கள், 6 சட்டப்பேரவைத் தொகுதிகள்,16.18 லட்சம் மக்கள் தொகை, 13.78 லட்சம் வாக்காளர்கள் என ஒரு மக்களவைத் தொகுதிக்குரிய அனைத்து தகுதிகளும் உள்ளதால், புதுக்கோட்டை தொகுதியை உருவாக்க வேண்டும். இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.

புரட்சி கவிதாசன்

உத்தரவாதம் வேண்டும்: இது குறித்து பாஜக மாவட்ட பார்வையாளர் புரட்சி கவிதாசன் கூறியது: பாரம்பரியமான புதுக்கோட்டை மக்களவை தொகுதியை நீக்கியதற்கு சில அரசியல் கட்சியினர், மக்கள் பிரதிநிதிகளின் சூழ்ச்சியே காரணம். தற்போது தொகுதி மறுவரையறை பலரும் பல்வேறு விதமாக கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், புதுக்கோட்டை மக்களின் குரலானது, திருவிழாக் கூட்டத்தில் காணாமல்போன ஒரு குழந்தையின் குரலாக மாறிவிடும். எனவே, புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை உருவாக்கிக் கொடுப்போம் என்ற உத்தரவாதத்தை மாநில அரசு அறிவிக்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றார்.

x