ராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் அனைத்தும் சேதம்!


ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்த 1,083 வீட்டுவசதி வாரிய வீடுகளும் சேதமடைந்து விட்டதால், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு அலுவலர்கள் குடியிருப்பு களுக்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுவசதி வாரியத்தின் வாடகை குடியிருப்புகள் இல்லாததால் அரசு ஊழியர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இங்குள்ள அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தனியார் வாடகை குடியிருப்புகளில் அதிக வாடகை கொடுத்து வசிக்கின்றனர். வேறு மாவட்டங்களில் இருந்து பணி மாறுதலில் வருவோர்வீட்டுவசதிவாரியகுடியிருப்புகள் இல்லாததால் குடும்பங்களை ராமநாதபுரம் மாவட்டத்துக்கு அழைத்து வராமல், அவர்கள் மட்டும் அலைந்து திரிந்து பணிபுரியும் நிலையும் உள்ளது.

மாவட்டத் தலைநகரான ராமநாதபுரத்தில் கடந்த 1990-ம் ஆண்டில் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் அருகே பகுதி 1-ல் 38 வீடுகள், 1993-ல் மூலக்கொத்தளத்தில் பகுதி 2-ல் 96 வீடுகள். 1997-ல் பட்டணம்காத்தான் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பகுதி 3, 4ல் 757 வீடுகள், திருவாடானையில் 48 வீடுகள், வீடுகள் திருவாடானையில் 24 வீடுகள், முதுகுளத்தூரில் 24 வீடுகள், ராமேசுவரத்தில் 96 வீடுகள் கட்டப்பட்டன. இதில் ஏ,பி,சி,டி,இ என்ற பிரிவுகளில் இருந்த வீடுகளில் கடைநிலை அரசு ஊழியர் முதல் அதிகாரிகள் வரை அரசு நிர்ணயித்த வாடகையை செலுத்தி குடியிருந்தனர்.

இந்த வீடுகள் அனைத்தும் சேதமடைந்து இடிந்து விழத் தொடங்கியதால் கடந்த 2015ம் ஆண்டே மக்கள் இங்கு வசிக்க வேண்டாம் என வீட்டு வசதி வாரியத்தால் அறிவிப்பு செய்யப்பட்டது. அனைவைரும் காலி செய்த பின்னர் 2016-ம் ஆண்டு முதல் பயன்பாடில்லாமல் சேதமடைந்த நிலையில் கிடக்கிறது. அதனால் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்டத்தில் எங்கும் அரசு ஊழியர்களுக்கான வீட்டுவசதி வாரிய வாடகை குடியிருப்புகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து அனைத்து வீடுகளையும் இடிக்க வீட்டுவசதி வாரியம் அரசிடம் அனுமதி பெற்றது. அதன் படி ராமநாதபுரம் ஆட்சியரின் முகாம் அலு வலகம் அருகேயுள்ள குடியிருப்பு, மூலக் கொத்தளம் குடியிருப்பு, பட்டணம்காத்தான் பகுதி 3-ல் உள்ள குடியிருப்புகள் முழுமையாக இடிக்கப்பட்டுவிட்டன. மற்ற இடங்களில் உள்ள வீடுகள் பாழடைந்தும், காட்டுக்கருவேல மரங்கள் அடர்ந்தும் கிடக்கின்றன.

இக்குடியிருப்புகளை மொத்தமாக இடித்துவிட்டு அங்கு தற்போது அடுக்குமாடி வாடகை குடியிருப்புகளை வீட்டுவசதி வாரியம் கட்டினால் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் பயனடைவர் என அரசு அலுவலர்கள் கூறுகின்றனர். மேலும் அரசுக்கும் வருமானமும் கிடைக்கும்.இதுகுறித்து வீட்டுவசதி வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது: ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது எங்கும் வீட்டுவசதி வாரிய வாடகை குடியிருப்புகள் இல்லை. அதனால் சேதமடைந்த அனைத்து குடியிருப்புகளையும் இடித்துவிட்டு, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சேதமடைந்த குடியிருப்புகளை இடிக்க சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

இவர்கள் அரசுக்கு அறிக்கை அளித்ததும், சேதமடைந்த அனைத்து குடியிருப்புகளும் இடிக்கப்படும். அதன்பின், அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும் புதிய குடியிருப்புகள் கட்டப்படும். வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான மூலக்கொத்தளம் இடத்தில் ரூ. 17.5 கோடியில் வணிக வளாகம் கட்ட அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு வந்ததும் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தனர்.

x