பழநி நகராட்சி சார்பில் ரூ.18.58 கோடியில் செயல்படுத்த உள்ள புதிய குடிநீர் திட்டத்துக்கு கிரிவலப்பாதையில் 800 மீ. தூரத்துக்கு குழாய் பதிக்க தேவஸ்தானம் அனுமதி கொடுக்க மறுத்து ‘அடம் பிடிப்பதால்’, நகராட்சி நிர்வாகம் செய்வதறியாமல் திணறி வருகிறது.
பழநி நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக கொடைக்கானல் சாலையில் உள்ள கோடை கால நீர்த்தேக்கம் மற்றும் பாலாறு பொருந்தலாறு அணை உள்ளது. இங்கிருந்து 50 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு, சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்தம் செய்து நகராட்சியின் 33 வார்டுகளுக்கும் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநி யோகிக்கப்படுகிறது. இதுவரை மொத்தம் 9,483 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. கோடை கால நீர்த்தேக்கம் நிரம்பி தண்ணீர் வீணாவதைத் தடுக்கவும், மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கருத்தில் கொண்டு தட்டுப்பாடின்றி சுத்தமான குடிநீர் வழங்க புதிய திட்டத்தைச் செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
ரூ.18.58 கோடியில் குடிநீர் திட்டம்: அதன்படி, மாநில நிதி ஆணைய ஊக்கத் தொகை திட்டத்தில் கோடை கால நீர்த்தேக்கம் அருகே ரூ.8.78 கோடி செலவில் புதிதாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 ராட்சத குடிநீர் சுத்திகரிப்பு தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. அங்கிருந்து பழநி நகர் பகுதிக்கு குடிநீரை சுத்திகரிப்பு செய்து கொண்டு வருவதற்காக ரூ.9.8 கோடியில் 8 கி.மீ. தூரத்துக்கு ராட்சதக் குழாய்கள் தரையில் பதிக்கப்பட்டு வருகின்றன.
மொத்தம் ரூ.18.58 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் மூலமாக கூடுதலாக 30 லட்சம் லிட்டர் தண்ணீர் மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. அதாவது, ஒருவருக்கு 90 லிட்டர் முதல் 110 லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையில் விநியோகிக்கப்பட உள்ளது.
புவியீர்ப்பு விசையில் ஓடும் தண்ணீர்: பழநி கோடை கால நீர்த்தேக்கத்தில் இருந்து எந்தவித பம்பிங் மற்றும் மோட்டார் வசதி இல்லாமல் ‘புவியீர்ப்பு விசை’ மூலமாக மட்டுமே, பழநி மலைப்பகுதியில் 1932-ல் பிரிட்டிஷ் காலத்தில் அமைக்கப்பட்ட 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டியை தண்ணீர் வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து, அதே புவியீர்ப்பு விசை மூலமாகவே பழநி நகர் பகுதியில் திண்டுக்கல் சாலையில் உள்ள குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் செல்கிறது.
அங்கிருந்து, குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் நடக்கிறது. இந்த புதிய திட்டத்துக்காக, பிரிட்டிஷ் காலத்து தொட்டியில் இருந்து பழநி நகருக்கு தண்ணீரை கொண்டு செல்ல கிரிவலப்பாதையில் 800 மீட்டருக்கு குடிநீர் குழாய்கள் பதிக்க வேண்டியுள்ளது. இதற்காக, கடந்தாண்டு ராட்சதக் குழாய்கள் கொண்டு வரப்பட்டு கிரிவலப் பாதையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
மின்பாதை குறுக்கீடு: தற்போது குடிநீர் குழாய் பதிக்கும் பணி கிரிவலப் பாதையை எட்டியுள்ளது. இந்நிலையில் கிரிவலப்பாதையில் குடிநீர் குழாய் பதிக்க தேவஸ்தானம் அனுமதி மறுத்து வருகிறது. காரணம், பழநி மலைக் கோயிலுக்கு எளிதில் செல்ல பயன்படும் வின்ச் ரயில் மற்றும் ரோப் காருக்கு தேவையான மின்சார வசதிக்கான, மின் இணைப்புகள் கிரிவலப்பாதை வழியாக செல்கின்றன. அதனால், குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டும்போது, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் வின்ச் ரயில் மற்றும் ரோப் காரை இயக்க முடியாத நிலை உருவாகும்.
இதன் மூலம் வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள் மலைக் கோயிலுக்கு செல்ல முடியாமல் சிரமப்படுவர். கிரிவலப்பாதையிலும் பக்தர்கள் நடக்க முடியாமல் போகும். எனவே, கிரிவலப்பாதைக்கு பதிலாக, சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலை வழியாக குடிநீர் குழாய்களை பதித்து, தண்ணீரை கொண்டு செல்ல தேவஸ்தானம் வலியுறுத்தி உள்ளது.
ஆனால், 800 மீ. தூரத்துக்காக, 3 முதல் 5 கி.மீ. தூரம் குடிநீர் குழாய் இணைப்புகளை சுற்றிக் கொண்டு சென்றால் திட்டத்துக்கான செலவு மேலும் அதிகரிக்கும். ஆகவே, கிரிவலப்பாதையில் குடிநீர் குழாய் பதிக்க அனுமதிக்கக் கோரி நகராட்சி, தேவஸ்தானத்திடம் போராடி வருகிறது. குழாய் பதிக்க அனுமதி தர முடியாது என்பதில் தேவஸ்தானம் கண்டிப்புடன் இருப்பதால் நகராட்சி தரப்பில் இருந்து தொகுதி எம்எல்ஏ, மாவட்ட மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் வரை பேசியும், எந்த நடவடிக்கையும் இல்லை.
மக்களின் அத்தியாவசிய திட்டம்: வேறு வழியின்றி இந்தப் பிரச்சினையை சுமூகமாக பேசி முடிப்பதற்காக, மார்ச் 14-ம் தேதி வட்டாட்சியர் பிரசன்னா தலைமையில் அமைதி கூட்டம் நடத்தப்பட்டது. அதில், கீரனூர் வாகீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை காரணம் காட்டி, தேவஸ்தானம் தரப்பில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை. இதனால் அமைதி கூட்டம் மீண்டும் மார்ச் 19-ம் தேதி புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ஏற்கனவே, நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பை அகற்றியது, தனியார் வாகனங்களை நுழைய தடை விதித்தது போன்ற விவகாரத்தில் தேவஸ்தானம் மற்றும் நகராட்சி இடையே, கிரிவலப் பாதை யாருக்கும் சொந்தம் என்பதில் மோதல் தொடர்ந்து வருகிறது. தற்போது, புதிய குடிநீர் திட்ட பிரச்சினையால் செய்வதறியாது நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. கிரிவலப்பாதையை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள தேவஸ்தானம், இந்த புதிய குடிநீர் திட்டம் பழநி மக்களுக்கான அத்தியாவசிய திட்டம் என்பதால் இந்த விவகாரத்தில் இறங்கி வந்து, கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்காத வகையில் நகராட்சி குடிநீர் குழாய்களை கிரிவலப்பாதையில் பதிக்க தேவஸ்தானம் அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.