கழிவுநீர் கலப்பு, ஆகாயத்தாமரை பரவலால் மாசடைந்த கோவை குளங்கள்!


படம்: ஜெ.மனோகரன்

கோவை: கோவையில் உள்ள குளங்கள் கழிவுநீர் கலப்பு, ஆகாயத்தாமரை பரவல் உள்ளிட்டவற்றால் மாசடைந்து காணப்படுகின்றன.

கோவை மாநகரில் 343 ஏக்கர் பரப்பளவில் பெரியகுளம்,268 ஏக்கர் பரப்பளவில் சிங்காநல்லூர் குளம், 167 ஏக்கர் பரப்பளவில் வாலாங்குளம், 352 ஏக்கர் பரப்பளவில் செல்வ சிந்தாமணி குளம், 74 ஏக்கர் பரப்பளவில் குமாரசாமி குளம், 53 ஏக்கர் பரப்பளவில் செல்வாம்பதி குளம், 330 ஏக்கர் பரப்பளவில் குறிச்சிக்குளம், 55 ஏக்கர் பரப்பளவில் கிருஷ்ணாம்பதி குளம், 11 ஏக்கர் பரப்பில் நரசாம்பதி குளம் ஆகிய 9 குளங்கள் உள்ளன.

இவை நொய்யல் ஆற்றை நீராதாரமாகக் கொண்டுள்ளன. மாநகரில் நிலத்தடி நீர் மட் ம் உயர்வுக்கு இக்குளங்கள் முக்கியப் பங்காற்று கின்றன. மாநகரிலுள்ள மழைநீர் வடிகால்கள், இக்குளங்களில் வந்து கலக்கும் வகையில் அமைக்கப்பட்டு ள்ளன. தற்போது இந்தக் குளங்கள் கழிவுநீர் கலப்பு, ஆகாயத்தாமரைகள் பரவலால் மாசடைந்து காணப்படுகின்றன.

இது குறித்து சமூக செயற்பாட்டாளர்கள் உறும்போது, "கோவை மாநகரில் நீர்நிலைகளை பாதுகாக்காக மாநகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாலாங்குளம், குறிச்சிக்குளம், பெரியகுளம் உள்ளிட்ட அனைத்து குளங்களிலும் கழிவுநீர் கலப்பதை முழுமையாகத் தடுக்கவும், ஆகாயத்தாமரை பரவலைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். குளங்களை சுற்றியுள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குழாய்கள் வழியாக நேரடியாக குளத்துக்குள் வந்து கலக்கின்றன. இதனால் குளம் மாசடைகிறது.

சாலைகளில் வழிந்தோடும் மழைநீர் குளத்துக்குள் நேரடியாக வந்து கலக்கும் வகையில் மழைநீர் வடிகால்கள் கட்டப் பட்டுள்ளன. ஆனால், இவை சாலையோர சாக்கடைகளாக தான் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலமும் கழிவுநீர் நேரடியாக குளத்துக்குள் வருகிறது. இதனால் குளங்களில் ஆகாயத்தாமரைகள் எளிதில் படர்கின்றன. உக்கடம் வாலாங்குளம் முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்து காணப்படுகிறது.

இதேபோல, மாநகரில் உள்ள பல்வேறு குளங்களிலும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து காணப்படுகின்றன. குளங்களில் கழிவுநீர் கலப்பை தடுக்கவும், ஆகாயத்தாமரை பரவலைத் தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தையும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் பயன்பாட்டையும் முழுமையாக கொண்டு வர வேண்டும்" என்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "குளங்களில் கழிவுநீர் கலப்பை தடுக்க சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகாயத்தாமரை அகற்றும் பணி விரைவாக தொடங்கப்படும்" என்றனர்.

x