என்எல்சி தொழிற்சங்க தேர்தல் நடப்பது எப்போது? - முழுமையான விவரம்!


கடலூர்: நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் சற்றேறக்குறைய 7 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்களும், 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

தொழிலாளர்களின் உரிமைகள்,கோரிக்கைகள், நலன்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய தொழிலாளர் நல ஆணையத்தின் மூலம் நடத்தப்பட்டு, முடிவுகள் நிர்வாகத்திடம் வழங்கப்படும்.

அதனடிப்படையில் 51 சதவீத வாக்குகளை பிடிக்கும் தொழிற்சங்கம் அல்லது முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் தொழிற்சங்கங்கள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக செயல்படும். அந்த வகையில் 2022-ம் ஆண்டு நடைபெற்ற தொழிற்சங்கங்களுக்கான ரகசிய வாக்கெடுப்புத் தேர்தலில் தொமுசவும், அதொஊசவும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக செயல்பட்டு வந்தன.

தற்போது 2025 பிப்ரவரி 24-ம் தேதியோடு தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான கால வரம்பு முடிவு பெற்றுள்ளது. இதையடுத்து அடுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனிடையே ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் தங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வகையில், ரகசிய வாக்கெடுப்புத் தேர்தலில் தங்கள் சங்கத்தையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும், திராவிட தொழிலாளர் ஊழியர் சங்கம் 10 சதவீத வாக்குகளை பெறுகின்ற சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தை நாடியுள்ளன.

மற்றொரு புறத்தில் தொமுச, அதொஊச, சிஐடியு, எல்எல்எஃப், பாட்டாளித் தொழிற்சங்கம், பிஎம்எஸ் உள்ளிட்டத் தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளனர். தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்தி, புதிய நிர்வாகிகளோடு அதொஊச தொழிற்சங்க நிர்வாகிகள், சங்கத்தை மீண்டும் வெற்றிபெறச் செய்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற முனைப்போடு தொழிலாளர்களை சந்தித்து வருகின்றனர்.

அதேநேத்தில் மற்றொரு சங்கமான தொமுச நிர்வாகிகளுக்கான காலவரம்பு முடிவுற்று, தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதாலும், அதன் தலைவர் பொறுப்பில் இருந்தவர் ஓய்வுபெற்றதாலும், தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இதனால் அச்சங்கம், தொழிலாளர்களை சந்திப்பதில் தொய்வோடு காணப்படுகிறது.

தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரம் காலாவதியான நிலையில் ரகசிய வாக்கெடுப்புத் தேர்தல் குறித்து, என்எல்சி இந்தியா மனித வளத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, “மத்திய தொழிலாளர் நல ஆணையம் விரைவில் அறிவிப்பு வெளியிடும், அதைத் தொடர்ந்து சமூகமாக தேர்தல் நடத்தி முடித்து அங்கீகரிப்பட்டத் தொழிற்சங்கங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவிக்கின்றனர்.

தேர்தல் குறித்து என்எல்சி அதொஊச செயலாளர் வெற்றிவேலுவிடம் கேட்டபோது, “கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு கோரிக்கைகளை சமூகமான முறையில் பேசி தீர்வு கண்டுள்ளோம். அண்மையில் கூட, கடை நிலைத் தொழிலாளர்களின் ஊதிய விகிதாச்சாரத்தை திருத்தி, புதிய ஊதிய விகிதம் கிடைக்கச் செய்துள்ளோம். பணி ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் தாங்கள் வசித்து வந்த குடியிருப்புகளில் 26 மாதங்கள் சலுகை வாடகைக் கட்டணத்தில் வசித்துக் கொள்ள பேசி முடிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தின் ஒப்புதலோடு இதற்கான ஆணையும் வெளியாகும். அடுத்ததாக வாரிசு வேலை மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம்” என்று தெரிவிக்கிறார்.

இது தொடர்பாக என்எல்சி தொமுச செயலாளர் பாரியிடம் கேட்டபோது, “தொழிற்சங்க ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து ஆலோசனை நடத்திய பின்னரே தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என நினைக்கிறேன். ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் தேதி அறிவித்த பின்னரே தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுவோம்” என்று தெரிவிக்கிறார்.

தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதும், நெய்வேலி நகரியத்தில் தொழிற் சங்க தேர்தல் பணிகள் சூடு பிடிக்கும். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது தொழிற்சங்கத்தினரிடையே நடக்கத் தொடங்கியிருக்கிறது.

x