சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் 12 நாட்களில் 42 ஆயிரத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அரசுப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக கடந்தாண்டு முன்கூட்டியே மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. அதற்கு பெற்றோர்களிடம் வரவேற்பு கிடைத்தது.
அதைத் தொடர்ந்து வரும் கல்வியாண்டுக்கான(2025-26) மாணவர் சேர்க்கையும் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுவிட்டன. தற்போது மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சேர்க்கை தொடங்கி இதுவரை அரசுப் பள்ளிகளில் 41,931 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதேநேரம் கடந்தாண்டு சேர்க்கை தொடங்கிய 10 நாட்களில் 80 ஆயிரம் மாணவர்கள் வரை சேர்க்கப்பட்டனர். ஆனால், நடப்பாண்டு சேர்க்கையை சற்று மந்தமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கன்வாடி மையங்களில் படித்து முடிக்கவுள்ள 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பட்டியல் சேகரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான பணிகளை மேற்கொள்ளவும், 5 லட்சம் சேர்க்கையை இலக்காக கொண்டு செயல்படவும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மாணவர் சேர்க்கையை முன்வைத்து அரசுப் பள்ளி நலத்திட்டங்கள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு விளம்பரப் பணிகளை முன்னெடுக்க பள்ளிக்கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது.