4, 5, 7, 8-ம் வகுப்புகளுக்கு புதிய பாட புத்தகங்கள் அறிமுகம்


தேசிய கல்விக் கொள்கையின்படி 2025-26-ம் கல்வியாண்டு முதல் 4, 5, 7, 8-ம் வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக என்சிஇஆர்டி தகவல் தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாடத்திட்ட வடிவமைப்பு பணிகளை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம்(என்சிஇஆர்டி) மேற்கொண்டு வருகிறது. இதை அடிப்படையாக கொண்ட பாடப் புத்தகங்களை சிபிஎஸ்இ, கேந்தரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகள் பின்பற்றி வருகின்றன. இதற்கிடையே தேசிய கல்விக் கொள்கை-2020 மையமாக கொண்டு அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த என்சிஇஆர்டி முடிவு செய்தது. கலை, உடற்கல்வி, ஆரோக்கியம் மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த பாடதிட்டம் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி முதற்கட்டமாக 2024-25-ம் கல்வியாண்டில் 1, 2, 3, 6-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வரவுள்ள 2025-26-ம் கல்வியாண்டில் 4, 5, 7, 8-ம் வகுப்புகளுக்கு தேசிய கல்வி கொள்கையின்படி தயாரிக்கப்பட்டுள்ள புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையை என்சிஇஆர்டி இயக்குநர் டி.பி.சக்லானி, சிபிஎஸ்இ, கேந்தரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளின் வாரியங்களுக்கு அனுப்பியுள்ளார்.

அதில், ‘‘இந்த பாடப்புத்தகங்கள் பள்ளிக்கல்வியில் மாணவர்களுக்கு தேவையான கற்பித்தல், கற்றலை நிறைவு செய்யும். கலை, உடற்கல்வி, திறன் மற்றும் மொழி, கணிதம், அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் சமூக அறிவியல் பற்றிய புதிய நுணுக்கங்கள் உள்ளடக்கிய முழுமையான சூழலையும் இந்த பாடப்புத்தகங்கள் உறுதிசெய்யும். இதுதவிர, 2025-26-ம் கல்வியாண்டில் மாணவர்களிடம் விளையாட்டு, செயல்பாட்டு அளவிலான கற்றலில் ஈடுபடுவதை ஊக்குவிக்க அதற்கான உத்திகளை கையாள வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.

x