கனடாவின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்கவுள்ள மார்க் கார்னே, இந்தியாவுடனான உறவை புதுப்பிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
கனடாவில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியர்களுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதை இந்தியா மறுத்தது. ஆனாலும் கனடா தொடர்ந்து இந்தியா மீது குற்றம்சாட்டியது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதுமட்டுமல்லாமல் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவருடைய லிபரல் கட்சியினரும் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து, லிபரல் கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த ஜனவரி 6-ம் தேதி அறிவித்தார்.
இந்நிலையில், லிபரல் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 26 முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், பாங்க் ஆப் கனடாவின் முன்னாள் தலைவர் மார்க் கார்னே (59) 85.9% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் அவர் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
மார்க் கார்னே லிபரல் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, கனடா மீது அமெரிக்கா விதித்த கூடுதல் வரிவிதிப்பு குறித்து உரையாற்றினார். அப்போது, “ஒருமித்த கருத்து உடைய நாடுகளுடனான வர்த்தக உறவை மேம்படுத்த கனடா விரும்புகிறது. மேலும் நான் பிரதமரானால் இந்தியாவுடனான உறவை மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.
இந்தியா, கனடா இடையிலான பொருளாதார உறவு பற்றி கார்னேவுக்கு ஏற்கெனவே நன்கு தெரியும். எனவே, அவர் பிரதமராவது இந்தியாவுக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
பாங்க் ஆப் கனடா, பாங்க் ஆப் இங்கிலாந்து ஆகியவற்றின் தலைவராக பணியாற்றியுள்ள கார்னே, புரூக்பீல்டு சொத்து மேலாண்மை நிறுவன வாரியத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். புரூக்பீல்டு நிறுவனம் இந்தியாவின் ரியல் எஸ்டேட், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது