மினி பஸ் வேண்டாம்... அரசு பேருந்துகளே போதும்! - நீலகிரி மக்கள் கோருவது ஏன்?


குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 15 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், அரசு போக்குவரத்து மட்டுமே உள்ள மாவட்டத்தில் அரசு பேருந்துகளையே இயக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில்தான் முதன்முதலில் பேருந்துகள் அரசுடைமையாக்கப்பட்டன. இதனால், நீலகிரி மாவட்டத்தில் அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கி வருகின்றன.

இந்நிலையில், முக்கிய சாலைகளில் இருந்து உள்வாங்கிய கிராமப் பகுதிகளை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் 101 சிற்றுந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. ஆனால், முக்கிய சாலையில் இருந்து உள்வாங்கிய கிராமங்களை இணைக்கும் வகையில் இயக்கி,மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற அரசின் நோக்கம் நிறைவேறவில்லை.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய நகரங்களை ஒட்டிய பகுதிகளுக்கு மட்டுமே சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 101 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க உரிமம் வழங்கப்பட்டதால், அவ்வழித்தடங்களில் இயங்கி வந்த அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால், உள்வாங்கிய மலை கிராம மக்கள் இன்றளவும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அந்த பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால்,சிற்றுந்துகளுக்கு உரிமம் வழங்கப்பட்டதை காரணம் காட்டி, போக்குவரத்து துறை மறுத்து வருகிறது. இந்நிலையில், மேலும் 15 வழித்தடங்களுக்கு சிற்றுந்து உரிமங்கள் வழங்குவதாக அரசு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் சு.மனோகரன் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தின் பூகோள அமைப்பு மற்றும் மக்களுடைய வாழ்க்கை முறை ஆகியவற்றுக்கு சற்றும் பொருந்தாத சிற்றுந்துகள், அரசின் விதிமுறைகள் எதையும் பின்பற்றுவதில்லை. இதனால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, தற்போது இயங்கும் அனைத்து சிற்றுந்துகளின் உரிமங்களை ரத்து செய்யவும், புதிதாக உரிமம் வழங்குவதை தவிர்க்கவும், 101 பழைய வழித்தடங்களில் மீண்டும் அரசு பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரப் பகுதிகளில் கூடுதலாக நகர பேருந்துகள் இயக்க வேண்டும். உள்வாங்கிய மலை கிராமங்களை இணைக்கும் வகையில் சுற்று பேருந்துகள் இயக்க வேண்டும்’’ என்றார்.

x