பாழாகி வரும் பவானி ஆறு - காரணங்கள் என்னென்ன ?


கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆறு தொழிற்சாலை கழிவுகள், சட்ட விரோத சாயக்கழிவு, குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுகளால் மாசு அடைந்து வருகிறது. சமவெளி பகுதிகளில் கருப்பு நிறமாக மாறி குடிக்க தகுதியற்ற நீராக மாறிவிட்டதால் சாயக் கழிவுகளை கலப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கௌசிகா, சிறுவாணி, நொய்யல், பவானி ஆகிய நான்கு முக்கிய ஆறுகள் உள்ளன. இதில் காவிரி ஆற்றின் துணை ஆறாக உள்ள பவானி ஆறு, தமிழகத்தின் இரண்டாவது பெரிய நதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பவானி ஆறு மேற்கு தொடர்ச்சி மலை நீலகிரி மலைக் குன்றுகளில் உருவாகி கேரளாவின் அட்டப்பாடி பள்ளத்தாக்கில் ஒடி மீண்டும் தமிழகத்தில் நுழைகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை வழியாக பயணித்து மேட்டுப்பாளையம் அருகே சமவெளியைக் கடந்து சிறுமுகை வழியாக பவானி சாகர் நீர்த் தேக்கத்தில் மோயார் ஆற்றுடன் கலக்கிறது. அங்கிருந்து பயணித்து காவிரியில் கலக்கிறது. பவானி ஆற்றின் நீர் 90 சதவீதம் வேளாண்மைக்கு பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மலைகளில் இருந்து சமவெளிப்பகுதி வரை மாசு இல்லாமல் வரும் பவானி ஆறு, மேட்டுப்பாளையம் வட்டத்தில் தேக்கம்பட்டி தொடங்கி சிறு முகை வரை பல்வேறு தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுகள் கலப்பதால் குடிக்க தகுதியற்ற நீராக மாறியுள்ளது. பவானி ஆற்று நீரை வேளாண்மைக்கு மட்டுமே பயன்படுத்தலாம் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் நெசவுத்தொழில் அதிகமாக இருப்பதால் சட்ட விரோத சாயப்பட்டறைகள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. மேலும், குடியிருப்புகளில் இருந்து சுத்திகரிக்காமல் கழிவுகள் பவானி ஆற்றில் கலந்து வருவதால் பவானி ஆறு மாசு அடைந்த நிலையில் கருப்பு நிறமாக மாறி வருகிறது.

இதுகுறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறும்போது. "சிறுமுகை பகுதிகளில் சாயப்பட்டறைகள் குடியிருப்புப் பகுதிகளில் சிறிய அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. பெரிய தொழிற்சாலையாக இருந்தால் கண்காணிப்பு செய்ய முடியும். ஆனால் சிறிய இடத்தில் வீடுகளில் சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இந்த சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவுகள் பவானி ஆற்றில்

கலந்து வருகின்றன. இதனால் சிறுமுகை, ஜடையம்பாளையம் பகுதிகளில் பவானி ஆறு மாசு அடைந்த நிலையில் தண்ணீர் குடிக்க தகுதியற்றதாக மாறியுள்ளது. பவானி ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பதைத் தடுக்க கண்காணிப்பு செய்து வருகிறோம்" என்றனர்.

இதுகுறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வேளாண் விஞ்ஞானிகள் கூறும்போது, "வளரும் நாடான இந்தியாவில் தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுகள் ஆறுகளில் கலந்து வருகின்றன. பவானி ஆற்றை பொறுத்தவரை தொழிற்சாலை, சாயப்பட்டறை மற்றும் குடியிருப்புகளில் இருந்து கழிவுகள் கலப்பதைத் தடுக்க மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கரையோரங்களில் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் நாட்டு வகை மரங்களை நட வேண்டும். தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரித்த நீரையும் பவானி ஆற்றில் கலக்க அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் சில நேரங்களில் சுத்திகரிக்கப்படாத நீரையும் ஆற்றில் கலந்து விட வாய்ப்புள்ளது. எனவே, பவானி ஆற்றை கழிவுகள் கலக்காத நதியாக மாற்ற தமிழக அரசு கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.

x