மீண்டும் வேதாளம்! - தஞ்சை அண்ணா சாலையில் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு


தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சாலையில் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகள் மற்றும் வாகனங்கள். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ் |

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அண்ணா சாலையில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்ட கடைகள் அகற்றப்பட்ட நிலையில், அங்கு மீண்டும் வணிக வளாகம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சாலை உள்ளது. இந்த சாலையில் மழைநீர் வடிகால் மீது கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போது பர்மாவிலிருந்து தஞ்சாவூருக்கு புலம் பெயர்ந்து வந்தவர்களின் வாழ்வாதாரத்துக்காக ‘பர்மா பஜார்’ என்ற பெயரில் 70-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டிவிடப்பட்டு, வாடகை வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில், தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டபோது, ராசாமிராசுதார் சாலை, அண்ணா சாலை, காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் தேங்கியது. மழைநீர் செல்லும் வடிகால் மீது பர்மா பஜார் கடைகள் இருந்ததால், அந்த வழித்தடம் முழுவதுமாக அடைப்பட்டு போனது. இதையடுத்து, 3 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீர் வடிகால் மீது கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு பதிலாக, கீழவாசல் பகுதியில் அண்ணா வணிக வளாகம் கட்டி அதில் வியாபாரிகளுக்கு கடைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

பின்னர், பர்மா பஜாரில் வடிகால் மீது கட்டப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட்டு அங்கு நடைபாதை அமைக்கப்பட்டது. இதனால், அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது. இதற்கு பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்தனர். அதேநேரத்தில், கீழவாசல் பகுதியில் கட்டப்பட்ட அண்ணா வணிக வளாகத்தில் வாடகை அதிகம் எனக் கூறி பர்மா பஜார் வியாபாரிகள் அங்கு செல்ல தயக்கம் காட்டினர். இதனால், ஒருசில கடைகள் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான கடைகள் தற்போது வரை மூடியே கிடக்கின்றன.

இந்நிலையில், கடந்த தீபாவளி பண்டிகையின்போது அண்ணா சாலையில் தற்காலிக கடைகள் அமைத்து, அதற்கு ஆளுங்கட்சியினர் ஆயிரக்கணக்கான ரூபாய் வாடகை வசூலித்தனர். போக்குவரத்துக்கு இடையூறாக இந்த கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுநல வழக்கு தொடர்ந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை 24 மணிநேரத்தில் தற்காலிக கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. இதனால், தீபாவளி பண்டிகைக்கு நான்கு நாட்களுக்கு முன்பு இந்த கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

தற்போது, மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் தள்ளுவண்டிகளில் வைத்து பழங்கள், பேன்சி பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தாலும், இவை தற்காலிகமான ஆக்கிரமிப்பாகவே உள்ளன. இந்நிலையில், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மீண்டும் வணிக வளாகம் கட்ட வேண்டும் என பிப்.17-ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்களால் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தஞ்சாவூரில் ஏற்கெனவே மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள சரபோஜி சந்தை, அண்ணா, திருவள்ளுவர், காந்திஜி வணிக வளாகங்களில் கட்டப்பட்டுள்ள ஏராளமான கடைகள் ஏலம் விடப்படாமல் உள்ள நிலையில், தற்போது, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இடத்தில் மீண்டும் வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுக கவுன்சிலர் கே.மணிகண்டன் கூறுகையில், “ஏற்கெனவே மாநகராட்சியால் பல இடங்களில் வணிக வளாகம் கட்டி யாரும் வாடகைக்கு செல்லாத நிலையில் உள்ளனர். எனவே, வணிக வளாகத்துக்குப் பதிலாக தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பயன்தரும் வகையில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் யாத்ரி நிவாஸ் கட்ட வேண்டும்” என்றார்.

பாஜக பிரச்சார பிரிவு மாவட்ட துணைத் தலைவர் என்.கோவிந்தராஜன் கூறும்போது, “தஞ்சாவூரில் மீண்டும் போக்குவரத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சியால் கடைகள் கட்டப்பட்டால், மீ்ண்டும் நீதிமன்றத்தை நாட வேண்டி வரும்” என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: ஏற்கெனவே அங்கிருந்த கடைகள் அகற்றப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அங்கு கடைகள் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

x