காசாவில் மீதம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஜனவரி மாதம் 15-ம் தேதி 3 கட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. அதன்படி முதல்கட்டமாக 6 வாரகால போர் நிறுத்த ஒப்பந்தம் அமலானது. இதில் இஸ்ரேல் பிணைக் கைதிகள் 33 பேர் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல் பிணைக் கைதி ஒருவருக்கு 30 முதல் 50 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.
அமெரிக்க குடிமகன் எடான் அலெக்சாண்டர் உட்பட 24 பிணைக் கைதிகள் காசாவில் உயிருடன் இருப்பதாகவும், 35 பேரின் உடல்களும் காசாவில் இருப்பதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் பிணைக்கைதிகள் 8 பேரை, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் சந்தித்தார். அவர்களின் துன்ப அனுபவங்களை ட்ரம்ப் கேட்டறிந்தார். அனைத்து பிணைக் கைதிகளையும் மீட்கும் அதிபர் ட்ரம்ப் முயற்சிக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
அதன்பின் அதிபர் ட்ரம்ப் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: காசாவில் வேலையை முடிக்க தேவையான அனைத்தையும், இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளேன். பிணைக் கைதிகள் அனைவரையும், கொலை செய்யப்பட்வர்கள் அனைவரது உடல்களையும் ஹமாஸ் அமைப்பினர் உடனே ஒப்படைக்க வேண்டும். இனி நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்தான் இறந்தவர்களின் உடல்களை வைத்திருப்பர். நீங்கள் அதுபோன்ற நபர்கள்தான். இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் தீவிரவாத அமைப்புடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட கூடாது என்ற கொள்கைணை அமெரிக்கா நீண்ட நாட்களாக பின்பற்றி வந்தது. ஆனால், தற்போது கத்தார் தலைநகர் தோகாவில் ஹமாஸ் அமைப்பினருடன், அமெரிக்க குழுவினர் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் ரூபிகான் பவுண்டர்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆதம் போலரை, சிறப்பு தூதராக ட்ரம்ப் நியமித்துள்ளார்.
அமெரிக்க பிணைக் கைதிகளை விடுவிக்க கடந்த மாதேமே ஹமாஸ் அமைப்பினருடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் எகிப்து மற்றும் கத்தார் நாட்டு அதிகாரிகள் நடுவர்களாக செயல்பட்டு உதவி வருகின்றனர். பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த பேச்சுவார்த்தை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது