அமெரிக்கா விரும்பினால் கட்டண போருக்கு தயார் என சீனா அறிவித்துள்ளது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கெனவே 10% வரி விதிக்கப்படும் நிலையில் மேலும் 10% வரி விதிக்கப்படும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதுபோல கனடா, மெக்சிகோ பொருட்களுக்கும் கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புகள் கடந்த 4-ம் தேதி முதல் அமலுக்கு வந்தன.
இதற்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோயா பீன்ஸ், மக்காச்சோளம், பால்பொருட்கள் மற்றும் மாட்டிறைச்சிக்கு 10 முதல் 15% கூடுதல் வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது. இதுதவிர, அமெரிக்காவின் 25 நிறுவனங்கள் முதலீடு செய்யவும் சீனா கட்டுப்பாடு விதித்தது.
இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் நேற்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “பென்டானில் பிரச்சினைக்கு உண்மையிலேயே தீர்வு காண அமெரிக்கா விரும்பினால், ஒருவருக்கு ஒருவர் சமமாக பாவித்து எங்களுடன் ஆலோசனை செய்வதுதான் சரியான செயல். அமெரிக்கா போரை விரும்பினால், அது வரி தொடர்பானதாகவோ, வர்த்தகம் தொடர்பானதாகவோ அல்லது எந்த வகை போராக இருந்தாலும் இறுதி வரை எதிர்த்து போரிட நாங்கள் தயாராக இருக்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பென்டானில் நெருக்கடிக்கு அமெரிக்காதான் பொறுப்பு. வேறு எந்த நாடும் அல்ல. மனிதாபிமானம் மற்றும் அமெரிக்க மக்கள் மீதான நல்லெண்ண உணர்வுடன், இந்த பிரச்சினையை கையாள்வதில் அமெரிக்காவுக்கு உதவ உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
எங்கள் முயற்சியை அங்கீகரிப்பதற்கு பதிலாக, சீனா மீது பழி சுமத்த அமெரிக்கா முனைகிறது. அத்துடன் வரிகளை உயர்த்தி சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கவும் மிரட்டவும் முயற்சி செய்து வருகிறது. அவர்களுக்கு உதவி செய்ததற்காக அவர்கள் எங்களை தண்டிக்கிறார்கள். இது அமெரிக்காவின் பிரச்சினையை தீர்க்கப் போவதில்லை. மாறாக போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை சீர்குலைத்துவிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பென்டானில்.. பென்டானில் ஒரு செயற்கை ஓபியாய்டு ஆகும். இது ஹெராயினைவிட 50 மடங்கு வலிமையானது, மார்பைனைவிட 100 மடங்கு வலிமையானது. அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மற்றும் நாள்பட்ட வலிக்கு நிவாரணியாக இந்த மருத்து கொடுக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் பென்டானில் போதைப் பொருளாக பயன்படுத்தப்படுவதால் பலர் உயிரிழப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக கனடா, மெக்சிகோ, சீனாவிலிருந்து சட்டவிரோதமாக பென்டானில் அமெரிக்காவுக்கு வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியே அந்த நாடுகள் மீது ட்ரம்ப் கூடுதல் வரி விதித்து வருவதாகவும் கூறப்படுகிறது