மாஸ்கோ: அமெரிக்க் அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே மோதல் வெடித்த நிலையில், ஐரோப்பிய நாடுகள் அவசர கூட்டத்தை நடத்தின. உக்ரைனுக்கு வழங்கிய ஆயுத உதவிகளை அமெரிக்கா திடீரென நிறுத்திய சூழலில், ரஷ்ய ராணுவம் 3,000 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் எல்லைகளில் தாக்குதல் நடத்தின.
2022 பிப்ரவரி தொடங்கி 3 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு தேவையான நிதி உதவி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கினார். ஆனால், சமீபத்தில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், உக்ரைனுக்கான ஆதரவு நிலைப்பாட்டை கைவிட்டார். மேலும், ரஷ்யாவுக்கு நெருக்கமான கருத்துகளையும், ஜெலன்ஸ்கிக்கு எதிரான கருத்துக்களையும் ட்ரம்ப் தெரிவித்து வந்தார்.
இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே பகிரங்கமாக மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக உக்ரைனுக்கான ஆயுத உதவிகள் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளன.
அமெரிக்கா சார்பில் சுமார் 71 சரக்கு கப்பல்களில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. ஆயிரக்கணக்கான பீரங்கிகள், ஏவுகணைகள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டு உள்ளன. தற்போதுவரை உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதிபர் ட்ரம்பின் உத்தரவால் உக்ரைனுக்கான ஆயுத உதவி உடனடியாக நிறுத்தப்பட்டுவிட்டது. வரும் மே மாதம் அமெரிக்காவின் அனைத்து வகையான உதவிகளும் முழுமையாக நிறுத்தப்படும் என அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைனை அமெரிக்கா கைவிட்ட நிலையில், கடந்த சில நாட்களாக உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா மீண்டும் தீவிரமாக்கியுள்ளது. ரஷ்யா, உக்ரைன் எல்லை பகுதிகளில் சுமார் 100 இடங்களில் நேற்று கடுமையான சண்டை நடைபெற்றது. இதில் ரஷ்ய ராணுவத்தின் கை ஓங்கி இருந்தது. ரஷ்ய ராணுவம் சார்பில் சுமார் 3,000 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டன.
ரஷ்யாவில் இருந்து துருக்கிக்கு எரிவாயு கொண்டு செல்லும் 930 கி.மீ. நீளம் கொண்ட துர்க் பைப்லைனை தகர்க்க உக்ரைன் ராணுவம் நேற்று முயற்சி செய்தது. இந்த சதியை முறியடித்துவிட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைனின் தாக்குதல் முயற்சிக்கு ஹங்கேரி கண்டனம் தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கான உதவியை அமெரிக்கா நிறுத்திய நிலையில், தற்போது உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அந்த நாட்டுக்கு தேவையான ஆயுத உதவிகளை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வழங்கி வருகின்றன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி லண்டனில் நேற்று முன்தினம் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார். இதைத் தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அவசர கூட்டம் லண்டனில் நேற்று நடைபெற்றது. இதில் ஜெலன்ஸ்கியும் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி மோதல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
கூட்டத்துக்கு முன்பாக பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறும்போது, “ஐரோப்பிய நாடுகள் இணைந்து புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை தயார் செய்து அமெரிக்காவிடம் சமர்ப்பிப்போம். எங்களை பொறுத்தவரை உக்ரைனின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறோம்" என்று தெரிவித்தார்.