‘ரஷ்யா உங்களை 2 வாரத்தில் முடித்திருக்கும்’ - வெள்ளை மாளிகையில் வைத்து ஜெலன்ஸ்கியை வறுத்த ட்ரம்ப்!


நியூயார்க்: உலக தொலைக்காட்சிகளின் கேமராக்கள் முன்பாகவே, அமெரிக்க அதிபர், துணை அதிபருடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை உருவாக்கியது. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்சை நோக்கி உக்ரைன் அதிபர் கேள்விகளை வைத்ததே இந்த சண்டைக்கு காரணம் ஆகும்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று சந்திப்பு நடத்தினர். அப்போது உக்ரைன் போர் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்த அமெரிக்காவுக்கு ஜெலன்ஸ்கி போதுமான அளவு நன்றியுள்ளவராக இல்லை என்று ஜேடி வான்ஸ் குற்றம் சாட்டினர். துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், போரை ராஜ தந்திர நகர்வுகள் மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஜெலன்ஸ்கியிடம் கூறிய போது, எப்படிப்பட்ட ராஜ தந்திரம்? என்று ஜெலன்ஸ்கி கேட்டார்.

வெள்ளை மாளிகை அலுவலகத்திற்கு வந்து அமெரிக்க ஊடகங்கள் முன்பாகவே வாதிடுவது அவமரியாதை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் வான்ஸ் கூறினார். இந்த வாக்குவாதத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வான்ஸ் பேசுகையில், ‘அமெரிக்கா போரை நிறுத்துவதற்காக ரஷ்யா உடன் ராஜதந்திர முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. உங்களின் செயல்பாடு.. உங்களின் நாட்டிற்கே அழிவை ஏற்படுத்தி விடும்’ என்றார். இதை கேட்டு கோபப்பட்ட ஜெலன்ஸ்கி, ‘ரஷ்யாவை நீங்கள் தடுக்கவே இல்லையே.. ரஷ்யா 2019ல் இருந்தே போரை மேற்கொண்டு வருகிறது. அவரை நீங்கள் தடுக்கவே இல்லை. நீங்கள் எதை ராஜதந்திர செயல்பாடு என்று சொல்கிறீர்கள்?. உங்களுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே கடல் இருக்கிறது என்பதால் உங்களுக்கு ஆபத்து இல்லை என்று நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் ரஷ்யாவால் உங்களுக்கும் ஆபத்து வரும்’ என்றார்.

இதற்கு பதிலடி தந்த அதிபர் டிரம்ப், ‘உக்ரைன் நல்ல நிலைமையில் இல்லை.. நீங்கள் மிக மோசமான சூழலில் உள்ளீர்கள். உங்களுக்கு சாதகமாக எதுவும் இல்லை. இதற்கு எல்லாம் காரணம் நீங்கள்தான். உக்ரைன் மோசமான சூழலுக்கு மாற அனுமதித்து நீங்கள்தான். நீங்கள் பல கோடி மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றார்.

இதற்கு கோபமாக பதில் சொன்ன ஜெலன்ஸ்கி, ‘நீங்கள் இரண்டு நாட்டு போரை பற்றி சத்தமாக இப்படி மீடியா முன் பேசுவது சரியா என்று பார்த்துக்கொள்ளுங்கள். இந்த போரை நாங்கள் தனியாக எதிர்கொண்டு வருகிறோம். நாங்கள் தனித்துவிடப்பட்டு உள்ளோம்’ என்றார். அதற்கு பதிலளித்த டிரம்ப், ‘அப்படி எல்லாம் பேசாதீர்கள்.. நீங்கள் தனியாக இருந்தால் கதையே வேறு. அமெரிக்கா உதவி இருக்கிறது உங்களுக்கு. முன்பு பதவியில் இருந்த முட்டாள் பிரதமர் உங்களுக்கு 350 பில்லியன் டாலர் தந்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். வான்ஸ் சத்தமாக பேசவில்லை. நாங்கள் இருப்பதால் எதோ உங்கள் நாடு இருக்கிறது. இல்லையென்றால் இந்த போரில் நீங்கள் இன்னும் மோசமாக சிக்கி இருப்பீர்கள். ரஷ்யா உங்களை 2 வாரத்தில் முடித்திருக்கும். உங்களுக்கு இந்த போரில் வெல்லும் வாய்ப்பே இல்லை. நீங்கள் 3ம் உலகப்போரை வைத்து விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்’ என்றார் ஆவேசமாக

மேலும், ‘நீங்கள் போதும் போதும் எனும் அளவுக்கு பேசிவிட்டீர்கள். நீங்கள் இதில் வெல்லவில்லை. நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். இந்த ஆட்டத்தில் தொடர்ந்து நீடித்திருக்க உங்களிடம் ஏதும் இல்லை." என்றார் டிரம்ப்.

"நான் விளையாடவில்லை. நான் மிகவும் உறுதியுடன் இருக்கிறேன் அதிபர் அவர்களே. நான் போரில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டின் அதிபர்" என்றார் ஜெலன்ஸ்கி.

"நீங்கள் செய்வது நாட்டிற்கு, இந்த நாட்டிற்கு மிகவும் அவமரியாதையானது." என்றார் டிரம்ப்."இந்த முழு சந்திப்பிலும் ஒரு முறையாவது 'நன்றி' என்று சொன்னீர்களா? இல்லை" என்று வான்ஸ் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வுகளை அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் தனது தலையில் கைகளை வைத்துக் கொண்டு அந்த நிகழ்வுகளை நேரில் பார்த்துக் கொண்டிருந்தார்.

x