‘சிபில்’ ஸ்கோர் குறைய 3 முக்கிய காரணங்களும் விளைவுகளும்!


வங்கி, நிதி நிறுவனங்களில் அவசரத் தேவைக்குக் கூட கடன் பெறும்போது, ‘சிபில்’ ஸ்கோர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது குறித்து வல்லுநர்கள் பகிர்ந்த கைடன்ஸ் குறிப்புகள்...

வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தனி நபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன் வழங்க ஒரு முக்கிய காரணியாக ‘சிபில்’ (CIBIL) ஸ்கோரை கணக்கில் எடுத்துக் கொள்கின்றன.

சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை வழங்கப்படும். இதில் 750-க்கு மேல் இருந்தால் வாடிக்கையாளர் கேட்டபடி கடன் கிடைக்கும். சிபில் ஸ்கோர் 650 முதல் 749 வரை இருந்தால் கடன் கிடைக்கும். ஆனால் கூடுதல் வட்டி விதிக்க வாய்ப்பு உள்ளது. 550 -649 இருந்தால் கடன் கிடைக்க வாய்ப்பு குறைவு.

சிபில் ஸ்கோரை கணக்கிடும்போது 3 முக்கியக் காரணிகள் கருத்தில் கொள்ளப்படுகிறது. அதில்,‘கடன் திருப்பிச் செலுத்திய வரலாறு’ சிபில் ஸ்கோரில் 35% பங்களிக்கிறது.

முதலில், முந்தைய கடன்களை சரியானபடி திருப்பிச் செலுத்தினாரா என்றும், கால தாமதம் உண்டா என்பதையும், ஏதாவது கடன் தள்ளுபடி செய்யபட்டுள்ளதா என்பதும் கவனிக்கப்படும்.

இரண்டாவது ‘கடன் பயன்பாடு’. இது, 30% பங்களிக்கிறது. பயன்படுத்திய கடனின் அளவை, கிடைக்கும் மொத்தக் கடன் தொகையுடன் ஒப்பிட்டு, இது கணக்கிடப்படுகிறது.

அதிக கடன் பயன்பாட்டு விகிதம் ஒரு நபர் கடனைச் சார்ந்திருப்பதைக் குறிக்கலாம். அவரது கடனை சரியான நேரத்தில் செலுத்த முடியாமல் போகலாம். இதனால் ஸ்கோர் குறையும்.

மூன்றாவது ‘லோன் என்கொயரி’. ஒரு நபர் கடன் பெறுவதற்காக பல்வேறு நிதி நிறுவனங்களை குறுகிய காலத்தில் அணுகினால் அவரது சிபில் ஸ்கோர் குறையும்.

புதிய நடைமுறை: ஒரு சில நேரங்களில், வங்கிகள் - நிதி நிறுவனங்கள் சரியான நேரத்தில் தரவுகளை அளிக்காமல் போவதால் சிபில் மதிப்பெண் குறைவதையும் கவனிக்கலாம்.

இந்நிலையில், சிபில் தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் கடந்த ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் கடன் மதிப்பெண்ணை 15 நாட்களுக்கு ஒரு முறை (மாதத்தின் 15-ம் தேதி மற்றும் கடைசி தேதி), கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். இதை கடன் தகவல் நிறுவனங்களுக்கும் அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பே-வில் சிபில் செக் செய்வது எப்படி? -மொபைல் போனில் கூகுள் பே செயலியை ஓபன் செய்ய வேண்டும். தொடர்ந்து முகப்பு பக்கத்தில் கீழ் பகுதியில் உள்ள ‘மேனேஜ் யுவர் மனி’ பிரிவில் ‘Check your CIBIL score for free’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் பயனர்கள் ஆவணங்களில் உள்ளதுபடி தங்களது பெயரை உள்ளிட வேண்டும். அதை செய்த பிறகு நொடி பொழுதில் பயனர்கள் தங்களது சிபில் ஸ்கோரை அறிந்து கொள்ள முடியும்.

மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பான் கார்டு எண் போன்ற விவரங்களை ஏற்கெனவே வங்கி மற்றும் பயனர்கள் மூலம் கூகுள் பே அறிந்துள்ள காரணத்தால் சிபில் ஸ்கோரை எளிதில் பெற முடிகிறது. இதை TransUnion CIBIL நிறுவனத்தின் துணையுடன் கூகுள் பே வழங்குகிறது.

x