மகா கும்பமேளா நாளையுடன் நிறைவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்


பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் விமரிசையாக நடந்து வரும் மகா கும்பமேளா நாளை (பிப்.26) நிறைவடைகிறது.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் தினமும் 1 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இங்கு வருகை தந்த பக்தர்கள் எண்ணிக்கை 6 கோடியை கடந்துள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒன்றரை மாதமாக விமரிசையாக நடந்து வரும் கும்பமேளா, மகா சிவராத்திரி தினமான நாளை (பிப்.26) நிறைவடைகிறது. இதை யொட்டி, உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இதனால், அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயிலில் வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் யஷ்வந்த் சிங் கூறும்போது, "ரயில் வரும்போது மட்டுமே பக்தர்கள் நடைமேடைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். நகரை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.

140 பேர் மீது வழக்கு பதிவு: இதற்கிடையே, கும்பமேளா குறித்து அவதூறு செய்திகளை வெளியிட்டது தொடர்பாக 140 சமூக ஊடகவியலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகா கும்பமேளா சிறப்பு டிஐஜி வைபவ் கிருஷ்ணா கூறியதாவது: திரிவேணி சங்கமத்தில் 24-ம் தேதி (நேற்று) | கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர். நிறைவு நாளான 26-ம் தேதி கும்பமேளாவில் அதிக அளவிலான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கும்பமேளா குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த 140 சமூக ஊடகவியலாளர்கள் மீது 13 முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

x