ட்ரம்ப்பையே டென்சனாக்கும் ஜெலன்ஸ்கி: உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருவதில் மீண்டும் சிக்கல்!


நியூயார்க்: உக்ரைனில் அமைதி ஏற்படுவதுடன் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர்க்கப்படுமானால் நான் பதவியிலிருந்து விலக தயார் அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

2022 ம் ஆண்டு ரஷ்யா தொடர்ந்த போரில் உக்ரைனுக்கு முந்தைய பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ஆதரவாக இருந்தது. ஆனால் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் புதிதாக பொறுப்பேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். ரஷ்யாவுடன் மென்மையாக போக்கை கடைபிக்கும் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சர்வதிகாரி என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த சூழலில் சமீபத்தில் அமெரிக்க மற்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர்கள் தலைமையில், போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்தின. இதில் உக்ரைன் இடம்பெறவில்லை, எனவே நேட்டொ நாடுகளான ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சியில் உள்ளன.

இதனையடுத்து பேசிய ட்ரம்ப், “உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் நான் ஜெலன்ஸ்கியுடன் பேசுவதற்கான அவசியமில்லை என்று கருதுகிறேன். ரஷ்ய அதிபர் புடின் நினைத்தால் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற முடியும்.

மூன்று ஆண்டுகளாக அதிபராக இருக்கிறார். ஆனாலும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி கடுமை காட்டி வருகிறார். ஜெலன்ஸ்கியின் பிடிவாதப் போக்கை இனியும் தொடர விடப்போவதில்லை” என்று அவர் கூறினார்.

உக்ரைன் நாட்டில் கடந்த 2019ம் ஆண்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஜெலன்ஸ்கி அதிபரானார். கடந்தாண்டுடன் அவரது பதவி காலம் முடிவடைந்த நிலையில், போரை காரணம் காட்டி ஜெலன்ஸ்கி அதிபராக தொடந்து வருகிறார். இதனிடையே உக்ரைனில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் அவர், “ ஜெலன்ஸ்கிக்கு உக்ரைன் மக்கள் மத்தியில் செல்வாக்கு போய்விட்டது. தேர்தலை நடத்த தயாராக இல்லை. எனவேதான் போரை காரணம் காட்டி தப்பித்து வருகிறார்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்

நெருக்கடி முற்றிய நிலையில் அதிபர் ராஜினாமா செய்ய தயார் என ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். அவர், “உக்ரைனில் அமைதி ஏற்படுவதுடன் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர்க்கப்படுமானால் நான் பதவியிலிருந்து விலக தயார். ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனுக்கு அதிபர் டிரம்ப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் மிகவும் தேவை. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே டிரம்ப் மத்தியஸ்தராக இருக்க வேண்டும். ரஷ்யாவுக்கு ஆதரவாக இருக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.

நேட்டோவில் இணைவதாக சொல்லப்பட்டதுதான் உக்ரைன் மீது ரஷ்யா மீது போர் தொடுக்க முக்கிய காரணம். அப்படியிருக்க மீண்டும் நேட்டோ கோரிக்கையை ஜெலன்ஸ்கி முன்வைப்பது, ட்ரம்ப் மற்றும் புதினுக்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே இவ்விவகாரம் இனி மிகவும் சூடுபிடிக்கலாம்.

x