சென்னையில் யுபிஎஸ்சி தேர்வுக்கு இலவச உண்டு உறைவிட பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?


சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச உண்டு, உறைவிட பயிற்சியை சென்னை அண்ணாநகரில் உள்ள சேவா பாரதியின் ‘பாரதி பயிலகம்’ ஐஏஎஸ் அகாடமி அளிக்கிறது. 2025-26-ம் ஆண்டு பயிற்சிக்கு இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் உ.தன்ராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேவா பாரதியின் ‘பாரதி பயிலகம்’ 2020-ம் ஆண்டு முதல் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. 2022-ம் ஆண்டு முதல், உண்டு உறைவிடத்துடன் கூடிய பயிற்சி அளிக்கிறது. கடந்தாண்டு 1,600 பேர் விண்ணப்பித்து தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வை எழுதினர். மேலும் நேர்முகத் தேர்வு நடத்தி, அதில் 63 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்றனர்.

கடந்த 2 ஆண்டுகளில் இந்த பயிற்சி மையத்தில் படித்த மாணவன் ராமநாதன் ஐஏஎஸ் பணியிலும், தமிழக அரசின் குரூப் 1 பணிகளில் 5 பேரும், குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளில் 12 பேரும், மத்திய அரசு ஐ.பி.யில் ஒரு மாணவரும் பணியில் சேர்ந்துள்ளனர். இதில் ஒருவர் பார்வையற்ற மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 2025-26-ம் ஆண்டு பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது. இருபாலரும் விண்ணப்பிக்கலாம். உணவு, உறைவிடம் இலவசம். மகளிருக்கு தனி விடுதி. சிறந்த நிபுணர்களைக் கொண்டு நேரடி பயிற்சி அளிக்கப்படும். தரமான நூலகம், படிப்பகம் உள்ளது. மார்ச் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 90032 42208 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம். www.bharathipayilagam.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இ்வ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

x