வாடிகன்: ஒரு வாரத்துக்கும் மேலாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88 வயது) வயோதிகள் காரணமான உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிமோனியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நுரையீரல் தொற்று பிரச்சினையும், அனீமியா தொடர்புடைய பிளேட்லெட்டுகள் குறைந்ததன் காரணமாகவும் போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. நாளுக்கு நாள் அதிக வலியை அவர் அனுபவித்து வருகிறார் என்று வாடிகனின் சமீபத்திய செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. போப் பிரான்சிஸ் கவலைக்கிடமாக இருப்பதை மருத்துவர்களும் உறுதி செய்துள்ளனர்.
88 வயதான போப் சற்றே அதிக எடை கொண்டவர். உடல் ரீதியாக அவரால் சுறுசுறுப்பாக இயங்க முடியாது. முழங்கால்கள் மோசமாக இருப்பதால் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.