தஞ்சாவூர்: தஞ்சாவூர் ராஜராஜசோழன் மணிமண்டபத்தில் ரூ.3.5 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் முடிந்தும், இன்னும் திறக்கப்படாததால், அங்கு பொருத்தப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்கள் வீணாகி வருகின்றன. தஞ்சாவூரில் 1995-ம் ஆண்டு 8-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது, புதுக்கோட்டை சாலைக்கும், வல்லம் நெ.1 சாலைக்கும் இடையே சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் ராஜராஜசோழனுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது.
72 அடி உயரத்தில் கோயில் கோபுரம் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மண்டபத்தில் பொதுமக்கள் ஏறி, நகரின் அழகை ரசிக்க முடியும். மேலும், மாமன்னன் ராஜராஜ சோழன் குதிரையில் செல்வதுபோன்ற வெண்கல சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தில் உள்ள பூங்காவில் இருக்கைகள், செயற்கை நீரூற்று, சிறுவர்களுக்கான ஊஞ்சல், ரயில் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் உள்ளன.
அதேபோல, மணிமண்டபத்தின் கீழ் தளத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ராஜராஜசோழனின் ஆட்சி முறைகள், கண்டெடுக்கப்பட்ட கற்சிலைகள் போன்ற சோழர் காலத்திய வரலாறுகளை விளக்கும் புகைப்பட காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த மணிமண்டபத்துக்கு நாள்தோறும் உள்ளூர் மட்டுமின்றி, வெளியூரைச் சேர்ந்த பொதுமக்களும் அதிகளவில் வந்து பார்வையிட்டும், ஓய்வெடுத்தும், விளையாடியும் வந்தனர்.
மேலும், மணிமண்டபத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் கலை நிகழ்ச்சிகள், இலக்கிய சொற்பொழிவுகள், புகைப்படக் கண்காட்சிகள் போன்ற நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வந்தன. இந்தநிலையில் மணிமண்டபத்தை சீரமைக்க பொதுப்பணித் துறை முடிவு செய்தது. அதன்படி 2023-ம் ஆண்டு அக்டோபர் முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, சீரமைப்பு பணிகள் தொடங்கின. கட்டிடம் சீரமைப்பு, பூங்கா சீரமைப்பு என ரூ.3.5 கோடி மதிப்பில் மேற் கொள்ளப்பட்டு வந்த பணிகள் கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது.
ஆனால், இதுவரை இந்த மணிமண்டபம் மீண்டும் பயன்பாட்டுக்கு திறக்கப்படாததால், அங்கு சீரமைப்புக்கு பிறகு பொருத்தப்பட்டுள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் வீணாகி வருகின்றன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மணி மண்டபத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் திறப்பது குறித்து உள்ளூர் அமைச்சர் கோவி.செழியனின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். அமைச்சர் தேதி வழங்கிய பின்னர் மணிமண்டபம் திறக்கப்படும்’’ என்றனர்.