மதுரையில் அரசு சித்திரை பொருட்காட்சி முன்கூட்டியே தொடங்கப்படுமா? - மக்களின் எதிர்பார்ப்பு


மதுரை: கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலை காரணம் காட்டி தாமதமாக தொடங்கியதால் பொதுமக்களிடம் வரவேற்பை இழந்த மதுரை அரசு சித்திரை பொருட்காட்சியை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருவிழாக்களுக்கும், கொண்டாட்டங்களுக்கும் பெயர்போன நகரான மதுரையில் கண்காட்சிகளுக்கும், பொருட்காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது.

இதில் முதன்மையானதாக ஆண்டுதோறும் மீனாட்சி அம்மன் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடக்கும் அரசு பொருட்காட்சி கருதப்படுகிறது. சித்திரைத் திருவிழாவுக்காக திரளும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக சித்திரை பொருட்காட்சி திகழ்கிறது.

ஆண்டுதோறும் அரசு சார்பில் மாநகராட்சிக்கு சொந்தமான தமுக்கம் மைதானத்தில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக செய்தி மக்கள் தொடர்பு, சுற்றுலா, ஊரக வளர்ச்சி, வனம், வேளாண்மை, கால்நடை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அரங்குகள், அரசு சார்பு நிறுவன அரங்குகளும் இடம் பெறும். மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும், உணவுப் பொருட்களும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

45 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியை கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலை காரணம் காட்டி, திருவிழா முடிந்த பிறகு தாமதமாக நடத்தினர். இதனால் வழக்கமான பார்வையாளர்களையும், வருவாயையும் எட்ட முடியவில்லை. ஆனால், கடந்த காலங்களில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்றபோது தேர்தல் ஆணையத்திடம் அதிகாரிகள் முன்கூட்டியே அனுமதி பெற்று உரிய காலத்தில் பொருட்காட்சியைத் தொடங்கினர்.

தேர்தல் விதிகள் காரணமாக அரசு சார்பான அரங்குகள் மட்டும் இடம் பெறாமலும், அரசியல் கட்சியினர் பங்கேற்காமலும் பொருட்காட்சி நடைபெற்றது. ஆனால் கடந்த ஆண்டு இவ்வாறு நடத்த அதிகாரிகள் எந்த முயற்சியும் செய்யாததால் பொருட்காட்சி இல்லாத சித்திரைத் திருவிழாவாக இருந்தது.

அதேபோல், கடந்த 2022-ம் ஆண்டு தமுக்கம் மைதானத்தில் நடந்து வந்த மாநாட்டு அரங்க கட்டுமானப் பணிகளால் காலங்காலமாக தமுக்கத்தில் நடந்த அரசு பொருட்காட்சி திடீரென்று மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே நடத்தப்பட்டது. இதற்கும் பொதுமக்களிடம் வழக்கமான வரவேற்பு கிடைக்கவில்லை. மதுரையின் கலாச்சாரத்தையும், மக்களின் பழக்கவழக்கங்களையும் அறியாத அதிகாரிகளால் நகரின் பாரம்பரியம் சிதைக்கப்படுவதாக பொதுமக்கள் வருந்தினர்.

சமீபகாலமாக சித்திரைப் பொருட்காட்சியை நடத்துவதில் போதிய திட்டமிடலும், ஆர்வமும் அதிகாரிகளிடம் இல்லாமல் சரியான நேரத்தில் நடத்த முடியாததால் பார்வையாளர்கள் வருகைக் குறைவும், வருவாய் இழப்பும் ஏற்பட்டு வந்தது. அதனால், நடப்பாண்டு சித்திரைத் திருவிழாவுக்கு முன்னதாக, கோடை விடுமுறை தொடங்கும்போதே அரசு பொருட்காட்சியை தமுக்கத்தில் தொடங்க வேண்டும் என்பதே மதுரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல்
28-ல் வாஸ்து சாந்தியுடன் தொடங்குகிறது. மே 12-ல் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது. வழக்கத்தைவிட இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா தாமதமாக தொடங்குகிறது. அதனால், இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவுக்கு முன்பாக ஏப்ரல் 15-ம் தேதியே பொருட்காட்சியைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக மாநகராட்சி நிர்வாகத்திடம் தமுக்கம் மைதானத்தை ஒதுக்கக்கோரி கடிதம் வழங்கி உள்ளோம்’’ என்றனர்.

x