வாஷிங்டன்: மூன்று ஆண்டுகளாக அதிபராக இருக்கிறார். ஆனாலும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி கடுமை காட்டி வருகிறார். ஜெலன்ஸ்கியின் பிடிவாதப் போக்கை இனியும் தொடர விடப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
2022 முதல் நடந்துவரும் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் புதிதாக பொறுப்பேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். ரஷ்யா தொடர்ந்த போரில் உக்ரைனுக்கு முந்தைய பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ஆதரவாக இருந்தது. ஆனால் அமெரிக்காவில் ஆட்சி மாறியதும் காட்சிகள் மாறிவிட்டன. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், ரஷ்யாவுடன் மென்மையாக போக்கை கடைபித்து வருகிறார். அதே நேரத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் சர்வதிகாரி என்று டிரம்ப் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்த சூழலில் சமீபத்தில் அமெரிக்க மற்றும் ரஷ்ய தூதுக்குழுக்கள், அவர்களின் வெளியுறவு அமைச்சர்கள் தலைமையில், போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்தின. இதில் உக்ரைன் இடம்பெறவில்லை, இதனால் ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சியில் உள்ளன.
அந்த வகையில் ஃபாக்ஸ் நியூஸ் நிறுவனத்துக்கு ட்ரம்ப் அளித்துள்ள பேட்டியில், “ரஷ்ய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்தது. ஆனால் உக்ரைன் அதிபருடன் பேசவில்லை. உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் நான் ஜெலன்ஸ்கியுடன் பேசுவதற்கான அவசியமில்லை என்று கருதுகிறேன். உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி பங்கேற்க வேண்டும் என அவசியம் இல்லை. ரஷ்ய அதிபர் புடின் நினைத்தால் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற முடியும்.
மூன்று ஆண்டுகளாக அதிபராக இருக்கிறார். ஆனாலும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி கடுமை காட்டி வருகிறார். அதனால் நான் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகளில் ஜெலன்ஸ்கியோ வேறு உக்ரைன் அதிகாரிகளோ இடம்பெற வேண்டிய அவசியமேதுமில்லை. ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவர புதினும், ஜெலன்ஸ்கியும் நேரடியாக சந்தித்துப் பேச வேண்டும். ஜெலன்ஸ்கியின் பிடிவாதப் போக்கை இனியும் தொடர விடப்போவதில்லை” என்று அவர் கூறினார்.