சிவகங்கை: அரசு தொடக்கப் பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் மூலம் ஆசிரியர்கள், மாணவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் அரசு தொடக்கப்ப ள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் போர்டுடன் ஒரு ‘வெப் கேமரா’ மட்டுமின்றி கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் அரசு தொடக்கப் பள்ளிகள் ஒரே கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. இதனால் கண்காணிப்பு கேமரா மூலம் வகுப்பறைகளைக் கண்காணிக்க முடியும். இந்த கேமராக்கள் கணினி மூலம் இணைக்கப்பட்டு வருகின்றன. இந்த கேமராக்களை பள்ளி நேரம் தொடங்கி முடியும் வரை இயக்க வேண்டுமென ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இதன்மூலம் வகுப்பறையில் ஆசிரியர் கற்பித்தல் பணி, வருகை விவரம், மாணவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் கண்காணிக்க முடியும். மேலும் மேரா காட்சிகள் முழுவதும் கணினியில் பதிவாகும் என்பதால் பாலியல் தொல்லை போன்ற புகார்கள் எழும்போது, விசாரணை நடத்தப் பயன்படும்.
வெளிநபர்கள் பள்ளிக்குள் நுழைந்து அத்துமீறல்களில் ஈடுபடுவதையும் கண்காணிக்க முடியும். மேலும் காலப்போக்கில் அதிகாரிகள் நேரில் வராமலேயே, தாங்கள் இருந்த இடத்திலேயே இருந்தே ஆசிரியர், மாணவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் முடியும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ கண்காணிப்பு கேமராக்கள் குழந்தைகள் நலனுக்காகத்தான் பொருத்தப்படுகின்றன’ என்றனர்.