புதுடெல்லி: பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, குடும்ப தலைவிகளுக்கு மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி முதல் மாதம்தோறும் ரூ.2,500 உதவித் தொகைவழங்கப்படும் என புதிதாக பதவியேற்ற டெல்லி முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்
டெல்லியின் புதிய முதல்வராக நேற்று ராம் லீலா மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவின் ரேகா குப்தா பொறுப்பேற்றார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டனர். டெல்லியின் 9-வது முதல்வராக பதவியேற்ற ரேகா குப்தாவுக்கு துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மேலும், பர்வேஷ் சாகிப் சிங் வர்மா, கபில் மிஸ்ரா, மச்சிந்தர் சிங் சிர்சா, ஆசிஷ் சூட், பங்கஜ் குமார் சிங், ரவீந்தர் இந்த்ராஜ் சிங் ஆகிய 6 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இதில் பர்வேஷ் வர்மாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
புதிய முதல்வராக பதவியேற்ற பின்னர் ரேகா குப்தா கூறியதாவது, ‘டெல்லி முதல்வராக பதவியேற்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. எனக்கு மிகப்பெரிய பொறுப்பை வழங்கியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைமைக்கு மனதார நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பாஜக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதன்படி அடுத்த மாதம் 8-ம் தேதி பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.2,500 டெபாசிட் செய்யப்படும்.
முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆட்சிக் காலத்தில் மக்களின் வரிப்பணத்தில் பல கோடி ரூபாபை வாரியிறைத்து சீஸ் மஹால் புதுப்பிக்கப்பட்டது. அந்த பங்களாவில் நான் குடியேற மாட்டேன்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து மாலை 5 மணி அளவில் முதல்வர் ரேகா குப்தாவும், 6 அமைச்சர்களும் யமுனை நதிக் கரைக்கு சென்று ஆரத்தி, பூஜை, வழிபாடுகள் நடத்தினர். இரவு 7 மணிக்கு முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய கோப்புகளில் முதல்வர் கையெழுத்திட்டார்.
கடந்த 5-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 8-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பின்னர் டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டார்.