டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலையை நிறுவினால் அது அமெரிக்காவுக்கு அநியாயமானது என அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், வரிவிதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால் இந்த முயற்சி தாமதமாகி வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியை டெஸ்லா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் சந்தித்துப் பேசினார்.
இந்த சூழ்நிலையில், இந்தியாவில் வேலைக்கு ஆள் எடுப்பது தொடர்பான விளம்பரத்தை லிங்க்டு இன் பக்கத்தில் டெஸ்லா கடந்த திங்கள்கிழமை வெளியிட்டது. அதில், டெல்லி மற்றும் மும்பையில் பணிபுரிவதற்காக 13 பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதன்மூலம் டெஸ்லா இந்தியாவில் கால் பதிப்பது உறுதியாகி உள்ளது. ஆனால் அந்நிறுவனத்தின் தொழிற்சாலை இந்தியாவில் இல்லை.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் நம்மைப் பயன்படுத்திக் கொள்கிறது. உலக நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கின்றன. இனிமேல் அவர்கள் விதிக்கும் வரிக்கு நிகராக அவர்களுடைய பொருட்களுக்கும் வரி விதிக்கப்படும்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, உலகிலேயே இந்தியாதான் அதிக வரி விதிக்கிறது என அவரிடம் தெரிவித்தேன். இதனால் இந்தியாவில் கார் விற்பது நடைமுறை சாத்தியமற்றதாக உள்ளது. இந்தியாவின் வரிவிதிப்பை தவிர்ப்பதற்காக எலான் மஸ்க் அந்நாட்டில் டெஸ்லா தொழிற்சாலையை நிறுவினால் நிறுவட்டும். ஆனால் அது நமக்கு அநியாயமானது” என்றார்.
இந்த பேட்டியின்போது, அமெரிக்க அரசின் திறன் நிர்வாகத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் எலான் மஸ்க் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது